

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜன. 15) திறந்து வைத்தார்.
பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய திடலில் நடைபெறவுள்ளது.
இத்திடல் தொடக்க விழாவில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , “திருச்சிக்கு மலைக்கோட்டை எப்படி ஒரு அடையாளமோ, காவிரி ஆறு ஒரு அடையாளமோ, அதேபோல, சூரியூர் ஜல்லிக்கட்டும் திருச்சிக்கு ஒரு அடையாளம்! இந்த மைதானத்தைப் பார்க்கும்போது, சூரியூர் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறதோ அதே பெருமையை நானும் அடைகிறேன்.
இந்த ஜல்லிக்கட்டு முதலில் ஊர்த்தெருக்களில் நடைபெற்றது. அதன்பின், ஊர் மந்தைகளில் நடைபெற்றது, அதன்பின், வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பின் படிப்படியாக வளர்ந்து, இந்த ஆண்டு, சூரியூரில் ஜல்லிக்கட்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ள இந்த நிரந்தர அரங்கத்தில் நாளை (ஜன. 16) நடைபெறும் என்பது மகிழ்ச்சியான செய்தியாக அமைகிறது” என்றார். ஜல்லிக்கட்டு அரங்கம் தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே. என். நேரு உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.