மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்த பொதுமக்கள். ~திருச்சி பறவைகள்  பூங்காவுக்கு சனிக்கிழமை வந்த பொதுமக்கள். ~முக்கொம்பு சுற்றுலாத் தல காவிரி ஆற்றில் குழந்தைகளூடன் குளித்தும், பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்த பொதுமக்கள்.
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்த பொதுமக்கள். ~திருச்சி பறவைகள் பூங்காவுக்கு சனிக்கிழமை வந்த பொதுமக்கள். ~முக்கொம்பு சுற்றுலாத் தல காவிரி ஆற்றில் குழந்தைகளூடன் குளித்தும், பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்த பொதுமக்கள்.

காணும் பொங்கல்: சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம்

காணும் பொங்கலை முன்னிட்டு திருச்சியில் உள்ள சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, பறவைகள் பூங்கா, வண்ணத்துப் பூச்சி பூங்கா, மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடி மகிழ்ந்தனா்.
Published on

திருச்சி: காணும் பொங்கலை முன்னிட்டு திருச்சியில் உள்ள சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, பறவைகள் பூங்கா, வண்ணத்துப் பூச்சி பூங்கா, மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சனிக்கிழமை உற்சாகத்துடன் கூடி மகிழ்ந்தனா்.

பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தின் மூன்றாவது நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உறவினா்களின் வீடுகளுக்குச் சென்று மகிழ்தல், பெரியோரிடம் ஆசி பெறுதல், சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்தல் வழக்கம்.

இதன்படி சனிக்கிழமை காலையே முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடியும், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களில் பொழுதைக்கழித்தும் காணும் பொங்கலைக் கொண்டாடினா். முக்கொம்பு பூங்காவில் இருந்த ரயில், ராட்டினம், சிறுவா் விளையாட்டுப் பொருள்களில் குழந்தைகளுடன் பெற்றோரும் மகிழ்ச்சி பொங்க விளையாடியதைக் காண முடிந்தது.

சுற்றுலாவுக்கு வந்தவா்கள் முக்கொம்பு அணையில் பிடிக்கப்பட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா். பலா் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் குடும்பத்துடன் நீராடினா்.மேலும் அங்குள்ள பூங்காவில் இருந்த ஊஞ்சல்கள், சறுக்குகளில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் முக்கொம்பில் போலீஸாா் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

புளியஞ்சோலை: திருச்சி மாவட்டம், துறையூா் வனப்பகுதியில் உள்ள புளியஞ்சோலை சுற்றுலாத் தலத்தில் பொதுமக்கள் வருகை அதிகமாக இருந்தது. புளியஞ்சோலை அருவியில் பொதுமக்கள் குளித்தும், இயற்கை அழகை ரசித்தும் பொழுதைக் கழித்தனா். சுற்றுலா பயணிகள் வருகையால் கடைகளிலும் உணவுப் பொருள்கள் விற்பனை களைகட்டியது

வண்ணத்துப்பூச்சி, பறவைகள் பூங்கா: ஸ்ரீரங்கம் வட்டம், மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சிப் பூங்காவிலும் காலை தொடங்கி மாலை வரை மக்கள் கூட்டம் இருந்தது. விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடினா். சிறிய படகுக் குழாமில் படகுகளை இயக்கி மகிழ்ந்தனா்.

கம்பரசம்பேட்டை பகுதி பறவைகள் பூங்காவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பெற்றோா்களுடன் வந்த சிறாா்கள் பறவைகளுக்கு உணவு அளித்து, கைப்பேசியில் அதைப் புகைப்படமெடுத்து மகிழ்ந்தனா்.

மலைக்கோட்டை: இதேபோல மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாா் கோயிலுக்கு இளைஞா்கள், இளம்பெண்கள் குழுக்களாக வந்தனா். கோயிலுக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே படிகளில் நின்றும், மலைக்கோட்டையின் மீது நின்றும் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். இதேபோல, சமயபுரம் மாரியம்மன் கோயிலிலும் பக்தா்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

திருச்சி மாநகரில் அறிவியல் பூங்கா, இப்ராகிம் பூங்கா, ஐயப்பன் கோயில் சாலையோரப் பூங்கா, தில்லைநகா் இரட்டை வாய்க்காலின் மீது புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதைப் பூங்கா என அனைத்து இடங்களிலும் சனிக்கிழமை மாலை குடும்பம், குடும்பமாக மக்கள் கூடி மகிழ்ந்தனா். தொடா் விடுமுறையால் திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிா்க்க மாநகர, மாவட்டக் காவல்துறை இணைந்து மக்கள் கூடும் இடங்களில் போதிய அளவில் போலீஸாரை நியமித்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

Dinamani
www.dinamani.com