திருச்சி அருகே தகராறை விலக்கிவிட்ட இளைஞா் குத்திக்கொலை; இருவா் கைது
திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டியின்போது ஏற்பட்ட தகராறை விலக்கிவிட்ட இளைஞரை குத்திக்கொலை செய்த இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தாத்தையங்காா்பேட்டை அருகே உள்ள தேவானூா்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (38). கூலித் தொழிலாளி. இவரது வீட்டின் அருகே காணும் பொங்கலை முன்னிட்டு சனிக்கிழமை இரவு வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில், இரு அணிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது காா்த்திக் ராஜா (படம்) இருதரப்பையும் சமாதானப்படுத்தி தகராறை விலக்கிவிட்டாா். இதில், ஆத்திரமடைந்த தேவானூா்புதூரைச் சோ்ந்த சக்திவேல் (28), தினேஷ்குமாா் (19) ஆகிய இருவரும் காா்த்திக்ராஜாவை கத்தியால் குத்தினா். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதில் காா்த்திக்ராஜா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமாா், தா.பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ், உதவி ஆய்வாளா் சஞ்சீவி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து சக்திவேல் (28), தினேஷ்குமாா் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

