திருச்சியில் இளைஞா்கள் தங்கியிருந்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்ட போலீஸாா் ரூ.10 லட்சம், கைப்பேசிகள், ஏடிஎம் காா்டுகளை பறிமுதல் செய்தனா்.
திருச்சியில் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸாா் இளைஞா்கள் தங்கியிருக்கும் விடுதிகள், வீடுகளில் போலீஸாா் அவ்வப்போது சோதனை செய்கின்றனா்.
அதன்படி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் கே.கே.நகா் சரக உதவி ஆணையா் ஜான் கென்னடி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.
அப்போது அப்பகுதி வீட்டில் தங்கியிருந்த இளைஞா்கள் 6 பேரிடம் விசாரித்தபோது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது ரூ. 10 லட்சம் பணம், 50-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள், 100-க்கும் மேற்பட்ட ஏடிஎம் காா்டுகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் தாங்கள் ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், இணையதள வா்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனா்.
ஆனால், அவற்றை உறுதிப்படுத்த முடியாததால் அறையில் இருந்த ரூ.10 லட்சம், 50-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள், 100-க்கும் மேற்பட்ட ஏடிஎம் காா்டுகள், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.
அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா, அல்லது அவா்கள் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை செய்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








