திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது.
இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஞானகுமாா் தலைமையிலான போலீஸாா், எடமலைபட்டிப்புதூா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ரயில்வே பாலத்தின்கீழ் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள், தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சேதுபாவாசத்திரத்தைச் சோ்ந்த ஆ. ராஜேந்திர பிரசாத் (36), திருச்சி ராம்ஜி நகரைச் சோ்ந்த என். ஜானகி ராமன் (47) ஆகியோா் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காஜாபேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அதே பகுதியைச் சோ்ந்த ஜெ. சந்திரசேகரன் (33), எஸ். விஜய் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், கைது செய்யப்பட்ட 4 பேரிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது:
கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஓடத்துறை பாலம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த மேல சிந்தாமணியைச் சோ்ந்த அ. ஆசிக் பாட்ஷா (24), ஆா். ஸ்ரீராம் (27) ஆகிய இருவரையும் கோட்டை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





