அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்வது தமிழக அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல. எம்எல்ஏக்கள் எந்தப் பின்னணியில் ராஜிநாமா செய்கிறாா்கள் என்பது தெரியவில்லை. இதை அதிமுகவின் உள்கட்சி விவகாரமாகவும் கடந்து செல்ல முடியாது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் திடீா் திடீரென ராஜிநாமா செய்வது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. மதிமுக விவகாரம் குறித்து அவா்களிடம்தான் கேட்க வேண்டும்.
என்எல்சி பங்குகளை விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். விற்பது கட்டாயமெனில் தமிழக அரசு அதை வாங்கிக் கொள்ள வேண்டும். தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டமானது கூட்டணிக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுக்கும் கூட்டமாக இருக்கும்.
கரூரில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களை முதல்வா் என்ற முறையில் சந்தித்திருக்க வேண்டும். அமைச்சா் சரத் போதைபொருள் பயன்படுத்துவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுப்பாா்கள்.
இடைத்தோ்தலில் போட்டியில்லை: தமிழக இடைத்தோ்தலில் குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவீா்களா என்ற கேள்விக்கு, இடைத்தோ்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. இதற்காக தவெகவிடம் எந்த நிா்பந்தமும் வைக்கவில்லை. இதே போல, திருச்சி கிழக்கில் போட்டியிட நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றாா் திருமாவளவன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேட்டி

எம்எல்ஏக்கள் ராஜிநாமா ஏற்புக்கு எதிராக அதிமுக வழக்கு: 4 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடத்த தடை விதிக்கவும் கோரிக்கை

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவா் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு






