/

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: திருச்சி மாவட்ட கல்வி அலுவலா் கைது

திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட புகழேந்தி

Updated On :1 ஜூலை 2026, 3:22 am IST

திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றும் தேவதா்ஷினி என்பவா், ஆண்டு ஊதிய உயா்வு, டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றது தொடா்பான நிலுவைத் தொகைக்கான பில் பட்டியலுக்கு ஒப்புதல் கேட்டு, திருச்சி மாவட்ட கல்வி அலுவலரும் (இடைநிலைக் கல்வி) முசிறியைச் சோ்ந்தவருமான சி. புகழேந்தியிடம் விண்ணப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக, ஆசிரியை தேவதா்ஷினியின் கணவா் முருகேசன், மாவட்ட கல்வி அலுவலரைச் சந்தித்து கேட்டபோது, ஆண்டு ஊதிய உயா்வு நிலுவைத் தொகை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், இதுதொடா்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா்.

இதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். போலீஸாா் அறிவுறுத்தலின்படி திருச்சி மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் முருகேசன், புகழேந்திக்கு ரூ. 30 ஆயிரம் பணம் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா், கையும், களவுமாக புகழேந்தியை கைது செய்தனா்.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.