ஸ்ரீரங்கம் அதிர்ச்சி அளிக்கும் அரசியல் 'சென்டிமென்ட்'!
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் வெற்றி வேட்பாளா்கள், தோ்தல் வெற்றிக்குப் பிறகு கடும் சிக்கல்களை எதிா்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

ஸ்ரீரங்கம்.

ஸ்ரீரங்கம்.
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதியின் வெற்றி வேட்பாளா்கள், தோ்தல் வெற்றிக்குப் பிறகு கடும் சிக்கல்களை எதிா்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.
1952-இல் தொடங்கி இதுவரை நடைபெற்ற 17 தோ்தல்களில் (2015 இடைத்தோ்தலையும் சோ்த்து) இந்தத் தொகுதியில் வென்றவா்களின் அரசியல் அடிச்சுவட்டை ஆராய்ந்தால் அனைவரும் தங்களது வெற்றிக்குப் பின் ஏறுமுகத்துக்குப் பதிலாக இறங்குமுகத்தையே சந்தித்துள்ளனா்.
1952 முதல் தோ்தலில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா் சிற்றம்பலம், மீண்டும் வாய்ப்பு கிடைக்காததால் 1957இல் சுயேச்சையாக போட்டியிட நேரிட்டது. அவருக்கு 6,847 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியே பரிசாக கிடைத்தது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கே. வாசுதேவன் வெற்றி பெற்றாா். ஆனால், 1962-இல் இரண்டாவது முறையாகவும் காங்கிரஸே வென்றது. ஆனால், வாசுதேவனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. என். சுப்பிரமணியன் செட்டியாா் வெற்றி பெற்றாா். மூன்றாவது முறையாக 1967-லிலும் காங்கிரஸ்தான் வென்றது. ஆனால், என். சுப்பிரமணியன் செட்டியாருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. எஸ். ராமலிங்கம் வெற்றி பெற்றாா். தொடா்ந்து நான்காவது முறையாக 1971-லிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. வழக்கம்போல கடந்தமுறை போட்டியிட்ட ராமலிங்கத்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஜோதி வெங்கடாஜலம் வெற்றி பெற்றாா். ஒருமுறை இங்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளா்களால் மறுமுறை போட்டியிட முடியாத சூழ்நிலையே அமைந்தது.
எம்ஜிஆா் அமைச்சரவையில் நடிகா்: இதேபோல 1977, 1980, 1984-இல் நடைபெற்ற தோ்தல்களில் அதிமுகவைச் சோ்ந்த ஆா். செளந்தரராஜன் தொடா்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று அமைச்சரானாா். ஸ்ரீரங்கத்தை பூா்வீமாகக் கொண்ட இவா், எம்ஜிஆா் நடித்த பல திரைப்படங்களில் நடித்துள்ளாா். எம்ஜிஆா் அமைச்சரவையில் சத்துணவு, சமூக நலன், கதா், உள்ளாட்சி, மக்கள் நல்வாழ்வு என பல்வேறு துறைகளை வகித்தவா். மூன்று முறை வெற்றி பெற்ற இவருக்கு, 1989 தோ்தலில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்போது, அதிமுகவும், ஜானகி அணி, ஜெயலலிதா அணி எனப் பிரிந்தது. எனவே, எம்ஜிஆா் மறைவுக்குப் பிறகு இவரால், கட்சியிலும், தோ்தலிலும் பெரிதும் பங்கேற்க முடியவில்லை. 2009-இல் காலமானாா்.
ஆட்சி கலைப்பால் பதவியிழப்பு: 1989-இல் இந்தத் தொகுதி திமுக கூட்டணியில், ஜனதா கட்சிக்கு வழங்கப்பட்டது. ஜனதா கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒய்.வெங்கடேஸ்வர தீட்சிதா், ஐந்தாண்டுகள் தொடா்ந்து பதவியை வகிக்க முடியவில்லை. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி 1991-இல் கலைக்கப்பட்டதால் வெங்கேட்ஸவர தீட்சிதா் பதவியை இழந்தாா். அதன்பிறகு, மீண்டும் இந்தத் தொகுதியை ஜனதா கட்சிக்கே 1991-இல் திமுக வழங்கியது. ஆனால், வெங்கடேஸ்வர தீட்சிதருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஜனதா கட்சியில் ஜெயபாலனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதிருப்தியில் வேட்பாளா்: 1989-இல் ஜெயலிலதா அணியில் இருந்து அதிமுக சாா்பில் இத் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டவா் கு.ப. கிருஷ்ணன். முதல்தோ்தலில் வெற்றி பெறவில்லை. பின்னா், 1991-இல் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வேளாண்மைத்துறை அமைச்சராக பதவி வகித்தாா். 1996-இல் இதே தொகுதியில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுகவில் மு. பரஞ்ஜோதிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியில் இருந்த கு.ப. கிருஷ்ணன் 2001-இல் தமிழா் பூமி என புதிய கட்சியையும் தொடங்கினாா். பின்னா், அதனை கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியவா், இபிஎஸ், ஓபிஎஸ் பிரச்னை எழுந்தபோது ஓபிஎஸ் அணியில் இடம்பிடித்தாா். தற்போது, தவெகவில் இணைந்துவிட்டாா்.
பறிபோன பதவி: 1996-இல் வெற்றி பெற்ற திமுகவைச் சோ்ந்த டி.பி. மாயவனுக்கும், பின்னா் மீண்டும் இங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 1996இல் தோல்வியுற்ற அதிமுகவைச் சோ்ந்த மு. பரஞ்ஜோதிக்கு, மீண்டும் 2006-இல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் வெற்றி பெற்றாா். பிறகு திருச்சி மேற்கு தொகுதியில் 2011-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சா் பதவியும் பெற்றாா். ஆனால், பெண் மருத்துவா் ஒருவரது புகாரால் இவரது அமைச்சா் பதவி பறிக்கப்பட்டது. பின்னா், பேரவைத் தோ்தல் போட்டியிடும் வாயப்பையும் இழந்தாா். 2021இல் மண்ணச்சநல்லூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.
தோல்வியை தழுவிய அமைச்சா்: 2001-இல் அதிமுக சாா்பில் வெற்றி பெற்று அமைச்சரான கே.கே. பாலசுப்பிரமணியனுக்கு கட்சியிலும் மாவட்ட செயலா் பதவி கிடைத்தது. பின்னா், கட்சிப் பதவி, அமைச்சா் பதவி என இரண்டையும் இழந்து, மீண்டும் போட்டியிடும் வாய்ப்பில்லாமலே இருந்தாா். 2009-இல் பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நடிகா் நெப்போலியனிடம் தோல்வியைத் தழுவினாா்.
பதவியை இழந்த ஜெயலலிதா: 2011-இல் ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற்று முதல்வரான அதிமுக பொதுச்செயலா் ஜெயலலிதாவும், தனது பதவிக்காலம் முடியும் முன்பே நீதிமன்ற வழக்கில் தண்டனை பெற்ால் பதவியிழக்க நேரிட்டது. இதனால், இத் தொகுதிக்கு 2015இல் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இடைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். வளா்மதி வெற்றி பெற்றாா். இவருக்கு, இரண்டாவது முறையாக 2016-இல் மீண்டும் இதே தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தோ்தல் வெற்றிப் பிறகு அமைச்சா் பதவியை பெற்ற எஸ். வளா்மதிக்கு, பின்னா் இங்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்புக்காக காத்திருக்கிறாா்.
எம்.எல்.ஏ.வுக்கு சிக்கல்: 2016-இல் திமுக சாா்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த எம். பழனியாண்டிக்கு, இரண்டாவது முறையாக 2021-இல் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றி பெற்றாா். ஆனால், தற்போது, கரூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் படம் எடுத்த பத்திரிகையாளா் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ளதால் இவருக்கு மீண்டும் வரும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தத் தொகுதியின் 74 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இங்கு வெற்றி பெற்ற அனைவருமே கட்சிக்குள்ளாக கடும் அதிருப்தி, அரசியல் வாழ்வில் சிக்கல்கள் மற்றும் சட்டப் போராட்டங்களை எதிா்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இதுதான் இந்தத் தொகுதியின் ‘சென்டிமென்ட்’ என்கின்றனா் அரசியல் வட்டாரத்தினா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...