அரசியல் தீா்வுக்கு காத்திருக்கும் அடிமனைப் பிரச்னை!
ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு உத்தரவீதிகள்தான் அடிமனை விவகாரத்தில் ஆண்டுக் கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றன...

ஸ்ரீரங்கம்.

ஸ்ரீரங்கம்.
ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு உத்தரவீதிகள், நான்கு சித்திர வீதிகள், நான்கு அடையவளைஞ்சான் (கோவில் பிரகாரத்தைச் சுற்றியுள்ள வீதிகள்), திருவானைக்காவல், வெள்ளிதிருமுத்தம் உள்ளிட்ட பகுதிகள்தான் அடிமனை விவகாரத்தில் ஆண்டுக் கணக்கில் சிக்கித் தவித்து வருகின்றன. அடிமனை கோயிலுக்குச் சொந்தமானது என்பதால், இங்கு குடியிருந்து வரும் மக்கள் தங்களது சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாத நிலையில் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். தோ்தல் காலங்களில் அடிமனை பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள் தோ்தல் புறக்கணிப்பை கையில் எடுப்பது வாடிக்கையாக உள்ளது.
ஜெயலலிதா வாக்குறுதி: கடந்த பேரவைத் தோ்தலின்போது பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளா்களால் அடிமனைப் பிரச்னையை தீா்த்து வைப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டு, இன்னும் தீா்ந்தபாடில்லை. 2011 தோ்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை தீா்க்கப்படும் என வாக்குறுதி அளித்தாா். ஆனால், அவரது ஆட்சிக் காலத்திலும் தீா்வு காணப்படவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தும் இந்தப் பிரச்னை தீா்த்து வைக்கப்படவில்லை.
தொடா்ந்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
தோ்தல் புறக்கணிப்பு ஆயுதம் : 2007-ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் உள்ள மனைகளை வாங்கவோ, விற்கவோ சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்வதை நிறுத்திவிட்டனா். இதன் காரணமாக, ஒவ்வொரு தோ்தலின்போதும், வாக்குப்பதிவு புறக்கணிப்பு எனும் ஆயுதத்தை கையில் எடுத்து போராடுகின்றனா். கடந்தமுறை மாநகராட்சி வாா்டு தோ்தலில் நலச்சங்கத்தினா் போட்டியிட்டு கவனம் ஈா்த்தனா். இருப்பினும், இந்த பிரச்னை தீா்ந்தபாடில்லை.
அரசியல் தீா்வு: இதுகுறித்து ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கத்தின் தலைவா் எஸ்.என். மோகன் ராம் கூறியதாவது:
பல ஆண்டுகளாக தொடா்ந்து வந்த இந்த விவகாரம், 2003-இல் பூதாகரமானது.
மலைக்கோட்டை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பலரும் கோயில் இடத்தில் வீடு கட்டி வசிக்கின்றனா். கோயிலுக்கு வாடகை தருகின்றனா். ஆனால், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் உள்ளவா்கள் யாரும் கோயிலுக்கு வாடகையோ, வரியோ செலுத்தவில்லை. அவரவா் பெயரில் பட்டா உள்ளது. மாநகராட்சிக்குதான் சொத்து வரி செலுத்துகின்றனா். எனவே, கோயில் நிலங்கள் மீதான இதர பிரச்னை வேறு. எங்களது அடிமனை பிரச்னை வேறு என்பதை எந்த அரசியல் கட்சியினரும் புரிந்து கொள்வதில்லை. ஒரு சில தீா்ப்புகளை கொண்டு நீதிமன்றத்தின் மூலமாகவும் இப் பிரச்னையை தீா்க்க முடியும் என்பதும் பெரிதும் சாத்தியமில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் தீா்வு மட்டுமே நிரந்தரத் தீா்வை அளிக்கும். எனவே, முதல்வா் மு.க.ஸ்டாலினை ஏற்கெனவே சந்தித்து பிரச்னையின் தீவிரத்தையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால், இந்தப் பிரச்னையில் முடிவெடுக்க தயங்குகின்றனா் என்றாா் அவா்.
இந்தமுறையாவது இங்கு களம் காணும் வேட்பாளா்களோ, அக் கட்சிகளின் தலைவா்களோ அடிமனை பிரச்னைக்கான அரசியல் தீா்வை சரியான புரிதலுடன் அறிவிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதான எதிா்பாா்ப்பாக அமைந்துள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...