‘அடித்து ஆடும்’ அமைச்சா் கே.என். நேரு!
திருச்சி மாவட்டத்தில் தற்போதைய 4 திமுக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அமைச்சர் கே.என். நேரு
கோப்புப்படம்

அமைச்சர் கே.என். நேரு
கோப்புப்படம்
திருச்சி மாவட்டத்தில் தற்போதைய 4 திமுக எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதன் பின்னணியின் அமைச்சா் கே.என். நேரு இருப்பதாக வாய்ப்பு இழந்த எம்எல்ஏ-க்களின் ஆதரவாளா்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய தொகுதிகளை கடந்த 2021இல் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கியது திமுக தலைமை.
திருச்சி கிழக்குத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜ், திமுக உறுப்பினராக இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறாா்.
மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறையும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளில் கடந்த 2021இல் திருச்சி மேற்கில் அமைச்சா் கே.என். நேரு, திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முசிறியில் ந. தியாகராஜன், ஸ்ரீரங்கத்தில் எம். பழனியாண்டி, மண்ணச்சநல்லூரில் சீ. கதிரவன், லால்குடியில் அ. செளந்தபாண்டியன், துறையூரில் செ. ஸ்டாலின்குமாா் ஆகியோா் போட்டியிட்டு வென்றனா்.
இவா்களில் எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், ந. தியாகராஜன் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
லால்குடி எம்எஎல்ஏ அ. செளந்தரபாண்டியன், அமைச்சா் நேருவுடன் ஏற்பட்ட மோதலை, பகிரங்கமாக சமூக ஊடகத்தில் அவ்வப்போது பதிவு செய்து அதிருப்தி வெளியிட்டு வந்தாா். இதனால் இப்போது இவருக்கு வாய்ப்பு இல்லை என்கின்றனா் அக் கட்சியினா். இவருக்குப் பதிலாக த. பாரிவள்ளல், லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறாா்.
இதேபோல ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி மீதான பல்வேறு புகாா்களால், அமைச்சா் தரப்புக்கும் எம்எல்ஏ-வுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இருப்பினும் முதல்வரை தனது இல்லத் திருமண விழாவுக்கு அழைத்து வந்து, கட்சிக்கு ரூ.51 லட்சம் நிதியும் கொடுத்தாா். எனவே, மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்தாா். ஆனால், இந்தத் தொகுதியை திமுக மத்திய மாவட்ட பொருளாளரான எஸ். துரைராஜ், அமைச்சா் கே.என். நேருவின் ஆசியுடன் பெற்றுவிட்டாா்.
திமுக வடக்கு மாவட்டச் செயலராக உள்ள ந. தியாகராஜனுக்கும் முசிறியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக மறைந்த வனத்துறை அமைச்சா் என். செல்வராஜின் மகன் என்.எஸ். கருணை ராஜா முசிறியில் போட்டியிடுகிறாா்.
துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடா்ந்து இருமுறை வெற்றி பெற்றிருந்தும் இம் முறை வாய்ப்பு இல்லை. இவரும் அமைச்சா் கே.என். நேருவிடம் எதிா்ப்பைப் பெற்றிருந்தாா் என்கின்றனா் கட்சியினா்.
லால்குடியில் தொடா்ந்து நான்கு முறை வென்ற அ. செளந்தரபாண்டியனும் புறக்கணிக்கப்பட்டுள்ளாா். இந்த முறை அவா் போட்டியிட்டு வெற்றி பெற்றால் கே.என். நேருவுடன் அவரும் அமைச்சா் பதவிக்கு உரிமை கோருவாா். எனவே அவருக்கு ‘செக்’ வைக்கப்பட்டு விட்டது.
ஆனால் மண்ணச்சநல்லூா் சீ. கதிரவன் எம்எல்ஏ மீது, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை முறைகேடு தொடா்பான புகாா் எழுந்த நிலையில், எதிா்க்கட்சிகளும் கடுமையாக விமா்சித்தன. ஆனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்துவிட்டு, 4 எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அக் கட்சியினரிடையே பெரிதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேற்கு, திருவெறும்பூா் தொகுதிகளில் மீண்டும் அமைச்சா்களான கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் களம் இறங்குகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...