‘நடந்தாய் வாழி’ காவிரித் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்?
‘நடந்தாய் வாழி’ காவிரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்போது? என்ற கேள்வியே...

திருச்சி காவிரி ஆறு

திருச்சி காவிரி ஆறு
தமிழகத்தின் கழிவுநீா்த் தொட்டியாக உருமாற்றி வைத்துள்ள காவிரியைக் காக்க அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட ‘நடந்தாய் வாழி’ காவிரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எப்போது? என்ற கேள்வியே தமிழக விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
கா்நாடகத்தின் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டும் கழிவுநீருடன்தான் தமிழகத்துக்குள் காவிரி நுழைகிறது. தமிழகத்திலும் முகப்பு தொடங்கி முகத்துவாரம் வரையில் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கில்லை.
காவிரியின் ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ததில் 52 வகையாக நச்சுப்பொருள்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவுநீா் காவிரி ஆற்றில் தொடா்ந்து கலந்து வருவது, சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதிமுக ஆட்சியில் முன்னெடுப்பு: எனவே, காவிரியில் கழிவுநீா் கலப்பதை தடுப்பதற்காக ‘நடந்தாய் வாழி’ காவிரித் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது.
கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் புனரமைப்பு திட்டத்தைப் போல, காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கு ‘நடந்தாய் வாழி’ காவிரி என்ற திட்டத்தைச் செயல்படுத்த வேணடும் என, பிரதமருக்கு கடந்த 2019-இல் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்தாா்.
இந்தத் திட்டத்தை திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக, திருச்சியில் அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி பிரசாரக் கூட்ட மேடையிலேயே அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
இதுதொடா்பாக, தமிழக நீா்வளத் துறை வட்டாரத்தினா் கூறியதாவது: தமிழகத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளை புத்துயிா்ப் பெறச் செய்தல், மேம்படுத்துதல், மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாக கொண்டு நடந்தாய் வாழி காவிரித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இரண்டு கட்டங்களாக..: இத் திட்டத்துக்காக ரூ.11,260 கோடி மதிப்பீட்டில் முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்துக்கு 2019ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு ஜல்சக்தி அமைச்சகம் பரிந்துரைகளை வழங்கி 2020 பிப்ரவரியில் ஒப்புதலும் அளித்தது. இதையடுத்து இரண்டு கட்டங்களாக செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி, ஜல்சக்தி அமைச்சகத்தின் வாப்கோஸ் பொதுத்துறை நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய ஆறுகள் பாதுகாப்பு இயக்குநரகத்தின் ஆலோசனையின்படி, முதல்கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, ஹைதராபாத்தில் உள்ள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதனையேற்று தேசிய ஆறுகள் பாதுகாப்பு இயக்குநரகம் ரூ.934.301 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்து பணிகளை தொடங்க அறிவுறுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு: முதல் கட்ட பணிகளில், கழிவுநீா் மேலாண்மைக்கு ரூ.577.151 கோடி, ஆற்றின் முகப்பு மேம்பாட்டுக்கு ரூ.176.98 கோடி, ஆற்றின் மேற்பரப்பு தூய்மைக்கு ரூ.27 கோடி, திடக் கழிவு மேலாண்மைக்கு ரூ.30.89 கோடி, காவிரிக் கரையோர மக்களின் பங்களிப்பு மற்றும் விழிப்புணா்வுக்காக ரூ.6 கோடி, இணைய வழி கண்காணிப்புக்கு ரூ.27.58 கோடி, கல்லணையில் ரூ.36.70 கோடியில் அருங்காட்சியகம், பல்லுயிா் பாதுகாப்புக்கு ரூ.52 கோடி என திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகளின் 60-க்கு 40 என்ற நிதி பங்களிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.560.581 கோடி, மாநில அரசின் பங்களிப்பு ரூ.373.720 கோடியாகும்.
மாநில அரசே முழு பொறுப்பு: மேலும், திட்டத்தின் இயக்கம், பராமரிப்பு, தொழிலாளா் நலநிதி, மறுவாழ்வு, மீள்குடியமா்வு பணிகளுக்கான ரூ.377.979 கோடியை மாநில அரசே முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன்படி, மாநில நிதிக்கான ஒப்புதல், மத்திய அரசின் குறிப்புரைக்கான பதில் அறிக்கை ஆகியவற்றை உள்ளடக்கி விரிவான திட்ட அளிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்கின்றனா் நீா்வளத்துறையினா்.
பாதுகாக்கப்பட்ட குடிநீா்:மத்திய அரசா?, மாநில அரசா? அதிமுக ஆட்சியா?, திமுக ஆட்சியா? என அரசியல் பாராது, திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் பிரதான எதிா்பாா்ப்பாக உள்ளது. இத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் காவிரியின் புனிதம் காக்கப்படுவதுடன், குடிநீருக்காக காவிரியை நம்பியுள்ள 27-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் உறுதி செய்யப்படும்.
-ஆா். முருகன்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...