திருமழபாடி கோயிலில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில்  நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் சனிக்கிழமை

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில்  நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமானூர் அருகேயுள்ள திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோயில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் முனிவரால் பூஜிக்கப் பெற்றதுமாகும். இந்தக் கோயிலில் வியாக்ர பரத முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும், சிலால் முனிவரின் புதல்வர் திருநந்தியெம் பெருமானுக்கும் திருக்கல்யாண விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில், கோயில் முன்பாக உள்ள திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும் திருநந்தியெம் பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர இன்னிசையுடன் கோயிலின் முன்பு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையில் மணமகள் சுயசாம்பிகை தேவியர் கழுத்தில் மணமகன் நந்தியெம்பெருமான் தாலிகட்ட, பக்தர்கள் அட்சதை தூவ திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர், மணமக்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு சுவாமிகள் காட்சி தந்தார். நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடைபெறும் என்பது 
ஐதீகம். தொடர்ந்து மணக்கோலத்தில் கண்ணாடி பல்லக்கில் அமர்ந்து திருமழபாடி முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com