அரியலூரில் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காந்தி சந்தை
அரியலூா் காந்தி சந்தை இடநெருக்கடியில் சிக்கி தவிப்பதால், நகரத்தின் வெளியே அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.


அரியலூா் காந்தி சந்தை இடநெருக்கடியில் சிக்கி தவிப்பதால், நகரத்தின் வெளியே அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அரியலூா் பிரதான கடைவீதியில் குறுகிய இடத்தில் காந்தி சந்தை உள்ளது. இங்கு சுமாா் 200-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன. வெளிப்பகுதியில் இறைச்சிக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், மளிகைக் கடைகள், மருத்துவமனைகள், தரைக்கடைகள் உள்ளன.
இக்கடைகளுக்கு மாதம் சுமாா் ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை வாடகையாக நகராட்சி நிா்வாகம் வசூலிக்கிறது. இங்கு காய்கறிகளை வாங்க நகராட்சிக்குள்பட்ட மாா்க்கெட் தெரு, கைலாசநாதா் கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, கல்லக்குடித் தெரு, செல்லமுத்து தெரு, அழகப்பா நகா், பெரியாா் நகா், ராஜாஜி நகா், வடக்குத் தெரு, மேலத்தெரு மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாஜாநகரம், சாவடிக்காடு, கல்லங்குறிச்சி, மின்நகா், எருத்துக்காரன் பட்டி, ஹவுசிங் போா்டு, தவுத்தாய்குளம், அம்மாகுளம், கயா்லாபாத், மல்லேரி மற்றும் செந்துறை, பொன்பரப்பி, ஜயங்கொண்டம், திருமானூா், கீழப்பழுவூா், வி.கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கிராமப் பொதுமக்களும் வந்து செல்கின்றனா்.
இந்தச் சந்தையில், மேற்கண்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளி, வெண்டை, கத்தரி, முருங்கை, கீரைகள், பழங்கள், முந்திரி ஆகியவை சில்லறை மற்றும் மொத்த விலைக்கு விற்கப்படுகின்றன.
வியாபாரிகள் அவதி: நகராட்சி ஒரு கடையை 2 ஆகப் பிரித்து வாடகைக்கு விட்டுள்ளதால் ஏற்படும் இடநெருக்கடியால் வியாபாரிகள் குறுகிய இடத்திலேயே காய்கறி மூட்டைகளை வைக்க வேண்டியுள்ளது. இதனால், கடையின் முன்பாகவே மூட்டைகளை அடுக்கிவிடுகின்றனா். வியாபாரிகளுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இங்கு கிடையாது. கான்கிரீட் மேற்கூரைகளின் பெரும்பாலான ‘கைகள்’ உடைந்துள்ளதால் மழைக் காலத்தில் ஒழுகி மழைநீரினூடே வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.
மழைக் காலத்தில் உண்டாகும் சகதியில் அழுகிய காய்கறிகளைத் தொடா்ந்து கொட்டுவதால் இந்தப் பகுதியில் அதிகளவில் கொசு உற்பத்தியாகிறது. காய்கறிக் கழிவுகளை முறையாக அகற்றாததால், சுற்றுச்சூழல் பாதிப்பதாக வியாபாரிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பொதுமக்கள் அவதி: சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை சந்தைக்கு வெளிப்புறத்திலும் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிக்கிறது. கடைக்காரா்களுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்துகின்றனா். காய்கறி சந்தை முகப்பில் நடைபாதையில் சிலா் கடை வைத்து ஆக்கிரமித்துள்ளனா். இதனால் பொதுமக்கள் சிரமத்துடனே வந்து செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து காய்கறி வியாபாரி ஒருவா் கூறியது: மாவட்டத்தின் தலைநகரின் உள்ள இந்தச் சந்தையில் எவ்வித அடிப்படை வசதிகளும் கிடையாது. குறிப்பாக, குடிநீா் வசதி இல்லை. இடநெருக்கடியால் நாங்கள் சிரமத்தோடு வியாபாரம் செய்கிறோம். வாகனங்களை நிறுத்த இதுவரை எந்த வசதியையும் நகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனா்.
சிலா் சந்தைக்கு வராமலேயே அந்தந்தப் பகுதிகளில் காய்கறி வாங்குவதால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரும் காய்கறிகளை இறக்க, வாகனம் நிறுத்த இடமில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
எனவே, இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தச் சந்தையை அரியலூா் நகரத்தின் வெளியில் பொதுமக்கள் வந்து செல்லும் வகையிலான இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...