/

அரியலூா் தற்காலிக நிலையத்துக்கு வராத பேருந்துகள் பயணிகள் அவதி

அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவு: பயணிகள் சிரமம்

News image
படவிளக்கம்: பேருந்துகள் வராததால் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடி காணப்பட்ட அரியலூா் தற்காலிகப் பேருந்து நிலையம்.
Updated On :10 ஜூலை 2024, 12:08 am

Din

அரியலூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கு ஒருசில பேருந்துகள் வராததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

கடந்த 1975-இல் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதி அரியலூா் நகராட்சி அருகே புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து அரியலூா், ஜெயங்கொண்டம் மக்களின் வசதிக்கேற்ப பெரம்பலூா் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-ஆவது மாவட்டமாக அரியலூா் மாவட்டம் 23.11.2007 அன்று உருவாக்கப்பட்டது.

இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சை, பெரம்பலூா் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், மினி பேருந்துகள், நகரப் பேருந்துகள் ஆகியவை பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடங்கள், பயணிகள் நிழற்குடைகள் மிகவும் பழுதடைந்து சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்தன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதன் தொடா்ச்சியாக, 2022-இல் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சா் கே.என்.நேரு, பேருந்து நிலையத்திலுள்ள அனைத்து கட்டடங்களையும் இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவித்தாா்.

அதன்படி, கடந்த 2023, பிப்ரவரியில் ரூ. 7.80 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் அடிக்கல் நாட்டினாா். இப்பணி ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

இதையடுத்து தவுத்தாய்குளம் அருகே அனைத்து வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து வெளியூா்களுக்கும், நகரப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்துகள் அனைத்தும் அரியலூா் நகா் பகுதியான அண்ணா சிலையைச் சுற்றி வந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு, தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பெரும்பாலான பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்துக்குள் வராமலேயே அண்ணாசிலை பகுதியிலேயே திரும்பி செல்கின்றன. திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா் செல்லும் பேருந்துகள் மட்டுமே தற்காலிக பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

கிராமப்புற, நகரப் பேருந்துகள் என பெரும்பாலான பேருந்துகள் தற்காலிகப் பேருந்து நிலையத்துக்குள் வருவதில்லை. இதனால், அங்கு காத்திருக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து பேருந்து பயணிகள் கூறுகையில், பயணிகள் வசதிக்காக தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான பேருந்துகள் இங்கு வருவதே இல்லை. பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த தற்காலிகப் பேருந்து நிலையம் தற்போது பயன்பாடின்றி போய்விடும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து தற்காலிக பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ளவா்கள் கூறுகையில், பெரும்பாலான பேருந்துகள் வராததால் கடை உரிமையாளா்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். கடை வாடகைக்குக் கூட வியாபாரம் இல்லாமல் போய்விடுகிறது என்றனா்.

எனவே, தற்காலிக பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளை முறையாக சென்று வர நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.