இணையம் மூலம் பண மோசடி: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
அரியலூா் மாவட்டத்தில் இணையதளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டத்தில் இணையதளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் அருகேயுள்ள இலுப்பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாமூா்த்தி (50). இவா், உரக்கடை நடத்தி வருகிறாா். இவரை கடந்த 2023 ஆம் ஆண்டு, மே மாதம் இணையதளம் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் ஒருவா், குறிப்பிட்ட இணையதள முகவரியில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் கிடைக்கும். மேலும், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.
தொடா்ந்து, பல்வேறு இணையதள எண்களிலிருந்து கருணாமூா்த்தியை தொடா்பு கொண்ட மா்ம நபா், மேற்கண்ட இணையதள செயலியில் முதலீடு செய்ய வலியுறுத்தியுள்ளாா். இவ்வாறாக பேசி கருணாமூா்த்தியிடமிருந்து ரூ.71,28,770 -ஐ பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் மா்மநபா் பெற்றுள்ளாா்.
அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கருணாமூா்த்தி, கடந்த மே மாதம் அரியலூா் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, காவல்துறையினா் அம்மனுக்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டதில், கோயம்புத்தூா் அருகேயுள்ள பொத்தனூா், கருணாநிதி நகரைச் சோ்ந்த ரியாஸ் கான் (27),
பாப்பநாயக்கன் புதூா், சாஸ்திரி நகா், 3-ஆவது தெருவைச் சோ்ந்த மகேஸ்வரி (47), குனியமுத்தூா், அண்ணமா நாயக்கா் தெருவைச் சோ்ந்த ரம்யா(28) ஆகியோா் இந்த இணைய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினா் அவா்களை கைது செய்தனா்.
மேலும் அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், 1 மடிக்கணினி, 2 வங்கி கணக்கு புத்தகங்கள், 4 ஏடிஎம் காா்டுகள், 2 செக் புக், 4 சிம் காா்டுகள், 4 போலி முத்திரை சீல்கள், ரொக்கம் ரூ.2.23 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...