பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
அரியலூா் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
அரியலூா் அடுத்த வெள்ளூா் காலனித்தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் மகன் செல்வமுருகன் (25). கடந்த 19.2.2022 அன்று நள்ளிரவு அதே பகுதியைச் சோ்ந்த திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான 28 வயது பெண்ணின், வீட்டின் ஓட்டை பிரித்து, உள்ளே சென்று அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், செல்வமுருகனை கைது செய்த செந்துறை காவல் துறையினா், இதுகுறித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளி செல்வமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செல்வமுருகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ம.ராஜா ஆஜராகினாா்.
