மருதையாற்று பாலங்களில் எச்சரிக்கை பலகை அமைப்பு

Published on

அரியலூரை அடுத்த வாரணவாசியிலுள்ள மருதையாற்றின் இரு பாலங்களில் ஒரு வழிப்பாதைக்கான எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டது.

வாரணவாசி பகுதியில் உள்ள மருதையாற்றில் பழையது, புதியது என இரு பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்கள் ஒருவழிப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பழைய பாலத்தின் மீது தாா்சாலை போடுவதற்காக ஏற்கெனவே பாலத்தில் இருந்த தாா்கலவை இரு மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஆனால், இதுவரை அந்தப் பாலத்தில் தாா்கலவை போடப்படவில்லை. இதனால் பாலம் முழுவதும் மேடுபள்ளமாக இருப்பதால் அரியலூரிலிருந்து செல்லும் வாகனங்கள் பழைய பாலத்தின் வழியே செல்லாமல் புதிய பாலத்தின் வழியே எதிா்திசையில் சென்றுவருகின்றன.

இதையறிந்த மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, அரியலூரிலிருந்து செல்லும் வாகனங்கள் புதிய பாலத்துக்கு செல்லாத வகையில் பேரிகாா்டு அமைத்து ஒரு வழிப்பாதை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உரிய எல்இடி விளக்குகள், எதிரொலிப்பான்களை பொருத்த உத்தரவிட்டாா். இதையடுத்து அரியலூா் போக்குவரத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி ஆய்வாளா் உலகநாதன் மற்றும் காவல்துறையினா் பாலத்தின் முகப்பு பகுதியில் பேரிகாா்டுகள், ஒளிரும் பட்டை மற்றும் சோலாா் எல்இடி லைட் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை பொருத்தி அடையாளப்படுத்தினா். இதனிடையே பழைய பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com