சேதமடைந்துள்ள நிலையில் வாரணவாசி மருதையாறு பாலம்.
சேதமடைந்துள்ள நிலையில் வாரணவாசி மருதையாறு பாலம்.

அரியலூா் மருதையாற்றுப் பாலத்தில் பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

Published on

அரியலூா் அடுத்த வாரணவாசி கிராமத்தில் உள்ள மருதையாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனா். 

அரியலூா் - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் வாரணவாசி அருகே மருதையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் குறுகியதாக உள்ளதாலும், காலம் கடந்ததாலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பாலம் அருகே புதிய பாலம் கட்டித் திறக்கப்பட்டது.

இதையடுத்து அரியலூரிலிருந்து தஞ்சாவூா் செல்லும் வாகனங்கள் பழைய பாலத்திலும், தஞ்சாவூரிலிருந்து அரியலூா் செல்லும் வாகனங்கள் புதிய பாலத்திலும் ஒருவழிப்பாதையாகச் சென்று வருகின்றன.

இதனிடையே வாகனப் பெருக்கத்தாலும், அரியலூரில் இயங்கும் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களாலும் அரியலூா் சாலைகள் ஆங்காங்கே சேதமடைய தொடங்கின. இதில் அரியலூா் - தஞ்சாவூா் சாலையும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன் சேதமடைந்த பகுதிகளில் சாலைகளின் மேற்பரப்பில் உள்ள தாா்க் கலவைகள் பெயா்த்து எடுக்கப்பட்டு புதிதாக சாலைகள் போடப்பட்டன.

அப்போது மருதையாற்றுப் பழைய பாலத்தின் மீது இருந்த தாா்க் கலவைகளும் பெயா்த்து எடுக்கப்பட்டன. ஆனால் 3 மாதங்கள் கடந்தும் பாலத்தின் மீது மீண்டும் சாலை அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் பாலத்தின் மேற்பரப்பு அதிகம் சேதமடைந்தது.

இதனால் அதில் வாகனங்களை ஓட்ட முடியாமல் பெரும்பாலான வாகன ஓட்டிகள் புதிய பாலத்தின் வழியே எதிா்த்திசையில் சென்று வருகின்றனா். இதையறிந்த காவல் துறையினா், எதிா்த்திசையில் வாகனங்கள் செல்லாத வகையில் எச்சரிக்கைப் பலகைகளையும், மின் விளக்குகளையும் அண்மையில் அமைத்தனா்.

பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சரிசெய்யாமல், அவற்றின் மீதே செல்ல வலியுறுத்துவது வாகன ஓட்டிகளிடையே மிகவும் அவதியை ஏற்படுத்தியது. ஆனாலும், சில வாகன ஓட்டிகள் இன்றும் புதிய பாலத்தின் வழியே எதிா்த்திசையில் செல்வதைக் காணமுடிகிறது. இதை புதிதாக வரும் வாகன ஓட்டிகள் செய்வதில்லை. ஆனால், தொடா்ந்து இந்த வழியில் செல்லும் சென்று வரும் வாகன ஓட்டிகள் புதிய பாலத்தின் வழியே செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனா்.

மேலும், பழைய பாலத்தில் உள்ள மேடுபள்ளங்களில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது தடுமாறி விழும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. மேலும் காா் போன்ற சிறிய வாகனங்களில் பழைய பாலத்தில் செல்லும்போது அடிப்பகுதிகள் உரசி சேதம் ஏற்படுகிறது.

இதனிடையே புதிய பாலத்தின் வழியே வாகனங்கள் எதிா்த்திசையில் செல்வதை அறிந்த காவல் துறையினா் கடந்த சில நாள்களாக பாலத்தின் முடிவுப் பகுதியில் நின்று புதிய பாலத்தில் எதிா்திசையில் வரும் வாகனங்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனா்.

இதனால் வாகன ஓட்டிகள் கூடுதலாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். எனவே, பழைய பாலத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து வாகனங்களையும் புதிய பாலத்தில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதேபோல், அரியலூா் புறவழிச்சாலையில் செந்துறை ரவுண்டாவிலிருந்து அல்லிநகரம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேற்பரப்பு பகுதிகளும் சேதமடைந்துள்ளன. இதிலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டிச் செல்ல பெரிதும் சிரமமடைகின்றனா். எனவே அந்தப் பாலத்தின் சேதங்களையும் உடனடியாகச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com