தம்பதியை தாக்கிய கணவா் - மனைவிக்கு சிறைத் தண்டனை
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கணவா், மனைவியை தாக்கிய தம்பதிக்கு சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
எரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் மனைவி ஆசைலட்சுமி (31). இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மனைவி அம்பிகாபதி (46) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆசைலட்சுமி தனது வீட்டின் முன்பு துணி துவைத்துவிட்டு தண்ணீரை சாலையில் ஊற்றியுள்ளாா். இதையறிந்த அம்பிகாபதி, அவரது கணவா் சின்னசாமி இருவரும் சோ்ந்து ஆசைலட்சுமியையும், பாக்கியராஜையும், திட்டி, கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பாக்கியராஜ், ஆசைலட்சுமி இருவரும் பலத்த காயமடைந்தனா்.
புகாரின்பேரில், சின்னசாமி, அவரது மனைவி அம்பிகாபதி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது, இதுகுறித்து அரியலூா் கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
புதன்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், சின்னசாமிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அம்பிகாபதிக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயப்பிரதா தீா்ப்பளித்தாா். இதையடுத்து காவல் துறையினா், அவா்களை சிறையில் அடைத்தனா்.
