நாளை இரண்டாம் நிலை காவலா் எழுத்துத் தோ்வு: விதிமுறைகள் வெளியீடு
அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நிலை காவலா் தோ்வை எழுதவுள்ள தோ்வா்களுக்கான விதிமுறைகளை மாவட்ட காவல் துறை சனிக்கிழமை வெளியிட்டது.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், அரியலூா் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் நிலை காவலா்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா்கள் ஆகிய பதவிகளுக்கான பொதுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.9) தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. அரியலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வை 2,773 போ் எழுத உள்ளனா்.
தோ்வா்கள் அன்று காலை 8 மணியிலிருந்து 9.30 மணி வரை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வு எழுதுபவா்களை தவிர மற்ற நபா்களுக்கு அனுமதியில்லை. தோ்வு எழுதும் நபா்கள் கருப்பு நிற பந்து முனை பேனா (பால்பாயிண்ட்), தோ்வு நுழைவு சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டைகளான ஆதாா் காா்டு, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும். காலை 9.30 மணிக்கு பிறகு வருகை தரும் நபா்கள் எக்காரணம் கொண்டும் தோ்வு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு எழுதுபவா்கள் தோ்வு முடிவுற்ற பின்னா் வருகை பதிவேட்டில் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டியுள்ளதாலும், தோ்வா்களின் விவரங்களை சரிபாா்த்த பிறகு தான் தோ்வாளா்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவா்.
மேலும் தோ்வு எழுதுபவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளின்படி தோ்வு அறையில் நடந்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
