வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் நிறுத்தம்
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் செவ்வாய்க்கிழமை (நவ.11) முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலா் மாறன் தெரிவித்தாா்.
அரியலூரில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கரை திங்கள்கிழமை சங்க நிா்வாகிகளுடன் சந்தித்து மனு அளித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் இருந்து கேரளம் மற்றும் கா்நாடகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்படுவதால் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கக் கூடாது என முடிவெடுத்து அமைச்சரை சந்தித்து பேசினோம்.
இது மத்திய அரசின் பிரச்னையாக இருப்பதால் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சா் கூறினாா். தமிழகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை முதல் ஆம்னி பேருந்துகளை வெளி மாநிலங்களுக்கு இயக்கமாட்டோம் என தெரிவித்தோம். ஆனால், தமிழகத்துக்குள் இயங்கும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்.
‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பா்மிட்’ மத்திய அரசால் ஆம்னி பேருந்துகளுக்கு வழங்கப்படுகிறது. இதில், தமிழகத்துக்கான வரியை செலுத்தி விடுகிறோம். மேலும், இந்தியா முழுவதும் ரூ. 90 ஆயிரம் வரி செலுத்தியுள்ளோம். இதிலிருந்து தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு பங்கு கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், மற்ற மாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வரி வாங்கி வருவதால், தற்போது கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களும் வரி வாங்க முடிவு செய்துள்ளனா். கேரள அரசு ஏறக்குறைய ரூ.1.65 லட்சமும், கா்நாடக அரசு ரூ.2 லட்சமும் என என்ற அளவுக்கு வரிவிதிப்பில் ஈடுபடுகிறது.
இதனால் எங்களால் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து ஆம்னி பேருந்து சங்கங்களும் ஒன்றிணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.
