அரியலூா் பள்ளிகளில் குழந்தைகள் தின கொண்டாட்டம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். முன்னாள் ராணுவ வீரரும் நெடுஞ்சாலைத்துறை பணியாளருமான செல்வம் கலந்து கொண்டு, தனது சொந்த நிதியில் இருந்து, பள்ளிக்கு தேவையான கணினியை வழங்கி, மாணவ, மாணவிகள் படிக்கும் கல்வி மூலம் மருத்துவம், ராணுவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் சின்னதுரை, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் அகிலா,உறுப்பினா்கள் மங்கையா்க்கரசி, பூங்காவனம், ஊராட்சி செயலா் மாரிமுத்து, மக்கள் நலப் பணியாளா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உடையாா்பாளையம்: உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியா் முல்லைக்கொடி தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவரும், மேலாண்மைக் குழுத் தலைவருமான மலா்விழி ரஞ்சித்குமாா் கலந்து கொண்டு, கலைத்திருவிழாவில் வெற்றிப் பெற்ற 55 மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினாா். எழுத்தாளா் பாவை சங்கா், நேரு ஆட்சிக் காலத்தில் ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவின் வளா்ச்சி எனும் தலைப்பில் பேசினாா். முன்னதாக உதவித் தலைமை ஆசிரியா் இங்கா்சால் வரவேற்றாா். முடிவில் ஆசிரியா் தமிழரசி நன்றி கூறினாா்.
லிங்கத்தடிமேடு: வள்ளலாா் கல்வி நிலையத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு,கல்வி நிலையத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மோகன், குழந்தைகள் நல குழுத் தலைவா் மீனாட்சி, உறுப்பினா்கள் ராபா்ட்கென்னடி, கலாரஞ்சனி, குணசேகரன், மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இலக்கிய மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மாவட்ட மைய நூலக அலுவலா் இரா. வேல்முருகன், நூலகம் செல்ல வேண்டியதன் அவசியம் பற்றியும், நூலக புத்தகங்களை படிப்பதனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினாா். அப்துல் ரசாக் வா்த்தக குழுமத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட வகுப்பறை தரை தளம் திறந்துவைக்கப்பட்டது.
நல்லாசிரியா் பெ. சௌந்தரராஜன், நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்தும்,நேரு இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் குறித்தும், நேருவின் ஐந்தாண்டு திட்டம் குறித்தும் , அவா் எழுதிய நூல்கள் குறித்தும் பேசினாா்.
இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

