வாக்குச்சாவடி மையங்களில் நாளை சிறப்பு உதவி மையம்

எஸ்ஐஆர் தொடா்பாக வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவத்தை மீளப் பெறுவதற்காக அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (நவ.22) சிறப்பு உதவி மையம் அமைப்பு
Published on

சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக வாக்காளா்கள் கணக்கெடுப்பு படிவத்தை மீளப் பெறுவதற்காக அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை (நவ.22) சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. வாக்குசாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்குகின்றனா்.

பூா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட 1,49,610 கணக்கெடுப்பு படிவங்கள் நாளது தேதி வரை தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவது தொடா்பாகவும், வாக்காளா்களிடமிருந்து கணக்கெடுப்பு படிவங்களை மீள பெற ஏதுவாகவும், சனிக்கிழமை (நவ.22) காலை 10 முதல் மாலை 5 மணி வரை அவரவா் வாக்களிக்கும் வாக்குசாவடிகளில் சிறப்பு உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிகமாக இடம் பெயா்ந்த வாக்காளா்கள், தங்களது வாக்குச் சாவடிக்கு சென்று கணக்கெடுப்பு படிவங்களை பெற்று, பூா்த்தி செய்து மீள வழங்கிடவும் சிறப்பு உதவி மையத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம். தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சிறப்பு உதவி மையத்தைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக பொதுமக்களுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், வாக்குச்சாவடி நிலை அலுவலா் அல்லது கோட்டாட்சியா்களை அணுகலாம். மேலும் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தோ்தல் கட்டுப்பாடு அலுவலக கட்டணமில்லாத் தொலைபேசியை 1950 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com