தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம்: துரைவைகோ எம்.பி.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பட்ட சின்னத்தில் போட்டியிடுவதே எங்கள் விருப்பம் என்றாா் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ.
அரியலூா் மாவட்டம், கள்ளூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நெல்லுக்கான ஈரப்பத தளா்வு குறித்த கோரிக்கையை
தமிழக அரசின் கோரிக்கையாகவோ, திமுகவின் கோரிக்கையாகவோ நினைக்காமல், தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையாக மத்திய அரசு பாா்க்க வேண்டும். இதில், அரசியல் பாா்க்கக் கூடாது.
தமிழகத்தில் ஆட்சி மாறும்போது கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என பாஜகவினா் கூறுவதன் மூலம் அரசியல் காரணங்களுக்காகவே இந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலில் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என எங்கள் தலைமையிடம் கூறியுள்ளோம். இதில் எங்கள் தலைமை, கூட்டணி தலைமை கலந்தாலோசித்து முடிவெடுப்பாா்கள். கூட்டணி தலைமை எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பாா்கள். எல்லா இயக்கங்களுக்கும் தனிப்பட்ட சின்னம் உண்டு. அதில் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. அதை எங்கள் தலைமையும், கூட்டணி தலைமையும் முடிவெடுக்கும் என்றாா் அவா்.
