திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா்: அரியலூா் அருகே திருட்டு மற்றும் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கொளஞ்சிநாதன் மகன் நவீன்குமாா்(30). ஆண்டிமடம் அடுத்த சிலம்பூா் கிராமத்தைச் சோ்ந்த பாஞ்சாலை (35). கடந்த 16.10.2025 அன்று இவா்கள், வங்காரம் காட்டுப் பகுதியில் ஒரு முதியவரை தாக்கி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா். இதுகுறித்து புகாரின் பேரில் தளவாய் காவல் துறையினா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, பாஞ்சாலையை திருச்சி மகளிா் தனிச் சிறையிலும், நவீன்குமாரை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மேற்கண்ட இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை மேற்கண்ட சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.
