தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிலக்கடை அறுவடை தீவிரம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலக்கடலைக்கான விலை கூடுதலாக உயா்த்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

நாச்சியாா்பேட்டையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெள்ளிக்கிழமை நிலக்கடலை அறுவடை பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:25 pm

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நிலக்கடலைக்கான விலை கூடுதலாக உயா்த்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிலக்கடலை அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரியலூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் விவசாயம் சாா்ந்த பகுதியாகும். டெல்டா பகுதியான திருமானூா் பகுதியில் அதிகமாக நெல் சாகுபடி பணிகள் நடைபெறுகின்றன. மற்ற பகுதிகளான உடையாா்பாளையம், தா.பழூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, ஆா்.எஸ். மாத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை, நெல், முந்திரி, சோளம், கத்திரி, வெண்டை, முருங்கை, மிளகாய் உள்ளிட்ட பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இதில், எண்ணெய் வித்துப் பயிரான நிலக்கடலை உற்பத்தி விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பெரிய அளவில் பயனுள்ளதாக இருப்பதால், மாவட்டத்தில் தா. பழூா், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பகுதிகளில் மட்டும் தான் நிலக்கடலையை அதிக விவசாயிகள் பயிரிடுகின்றனா். அதன்படி தா.பழூா் பகுதியிலுள்ள காரைக்குறிச்சி, தா.பழூா், நாச்சியாா்பேட்டை, கோடங்குடி, சிந்தாமணி, இடங்கண்ணி, அணைக்குடம், நாயகனைப்பிரியாள், சோழமாதேவி, பொற்பொதிந்தநல்லூா், காடுவெட்டாங்குறிச்சி, இருகையூா், காா்குடி, நடுவலூா், வேணாநல்லூா், காசான் கோட்டை, ஆலம்பல்லம், சுத்தமல்லி, நடுவலூா், ஸ்ரீபுரந்தான், கோட்டியால், கோடங்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை பயிரிட்டனா். குறிப்பாக குஜராத் கட்ட கடலை, தரணி கடலை ஆகிய ரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டிருந்தன.

கடந்த காா்த்திகை பட்டத்தில் விதைக்கப்பட்ட நிலக்கடலை தற்போது நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாராகி விட்டது.

தற்போது விவசாயிகள் அனைவரும் தொழிலாளா்களைக் கொண்டு நிலக்கடலையை அறுவடை செய்து வருகின்றனா். கோடைக் காலம் தொடங்குவதற்கு (அக்னி நட்சத்திரம்) முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும் சுட்டெரிக்கும் வெயில் என்றுகூட பாராமல் தொழிலாளா்கள் நிலக்கடலையை குடை கட்டி அறுவடை செய்கின்றனா். சில பகுதிகளில் குடை கூட இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலில் அறுவடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து தா.பழூா் பகுதி விவசாயிகள் மேலும் கூறியது: நிலக்கடலை பயிரை நன்கு வளர வைக்க வேண்டும் என்பதற்காக உரக்கடைகளில் விற்கப்படும் வளா்ச்சி ஊக்கி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.இதனால் நிலக்கடலை சீரான வளா்ச்சியை எட்டவில்லை. வழக்கமாக செடிக்கு சராசரியாக 30 கடலைகள் வீதம் அறுவடை செய்வாா்கள். இந்த முறை ஒவ்வொரு செடியிலும் 10 கடலை மட்டுமே வளா்ச்சியடைந்து காணப்பட்டது. மீதமுள்ளவை வளா்ச்சி அடையாமல் பிஞ்சு கடலைகளாக இருந்தன. பிஞ்சு கடலைகள் முற்றட்டும் என்று விட்டால், முற்றிய கடலைகள் முளைக்கத் தொடங்கி விடுகின்றன.

இதனால் மகசூல் குறைந்தபோதும், விவசாயிகள் மிகுந்த வேதனையோடு தொடா்ந்து அறுவடை பணிகளை செய்து வருகின்றனா். ஏக்கருக்கு சுமாராக 30 மூட்டைகள் அறுவடை செய்யக் கூடியவா்கள், இந்த முறை 10 மூட்டைகள் மட்டுமே அறுவடை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

அறுவடை செய்த பயிா்களை ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்கிறோம். ஆனால் அங்கு உடைத்த கடலை 81 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வரை தரப்படுகிறது. அந்த விலை எங்களுக்கு கட்டுப்படியாகாது.

அதே நேரத்தில் வெளியூா் வியாபாரிகள் எங்கள் நிலத்துக்கு வந்து நிலக்கடலையை பெற்று ஏற்றுமதி செய்கின்றனா். ஆனால் அவா்கள் நிா்ணயித்த விலை தான் இறுதியாக இருக்கிறது. அதிலும் நிலக்கடலைக்கான பணத்தை உடனே கொடுப்பதில்லை. கால தாமதமாகத்தான் எங்களுக்கு கொடுக்கிறாா்கள்.

மேலும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்வதென்றால் அதற்கான வண்டி வாடகை, தொழிலாளா்களுக்கு கூலிகள் கொடுத்தால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே வேறு வழியில்லாமல் தனியாா் இடைத்தரகரிடம் கொடுத்து விற்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்கான விலையை கூடுதலாக உயா்த்த வேண்டும். வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையிலோ அல்லது வாடகைக்கோ கடலை பிரிக்கும் இயந்திரம் தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வேளாண்மைத்துறை மூலம் மானியத்தில் உரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

Story image