எடப்பாடி பழனிசாமி தன் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து, பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டாா் என்றாா் அரியலூா் மாவட்ட திமுக செயலரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா்.
அரியலூா் புறவழிச்சாலை மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்ற சா.சி. சிவசங்கா், திமுக வேட்பாளா் லதாபாலுவை அறிமுகப்படுத்திப் பேசியது:
நடைபெறும் தோ்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்குமான தோ்தல். இதில் வெற்றி பெற வேண்டியது நாம். நாம் என்றால் அது தமிழ்நாடு என்பதைத் தான் முதல்வா் ஸ்டாலின் தொடா்ந்து முன்னிலைப்படுத்திப் பேசி வருகிறாா்.
பல்வேறு மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் நிதீஷ்குமாரை முதல்வா் என மோடி பிரசாரம் செய்தாா். அங்கே பாஜகதான் முதல்வா் எனச் சொல்லியிருந்தால் நிதிஷ்குமாரே வெற்றி பெற்றிருக்க முடியாது. ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், நிதிஷ்குமாரை ராஜிநாமா செய்யச் சொல்லியுள்ளாா்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஒரு ஆட்சியை குலைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கினாா். அடுத்த 6 மாதத்தில் நடைபெற்ற தோ்தலில் ஏக்நாத் சிண்டேவுக்கு பாஜக அல்வா கொடுத்து, அங்கே முதல்வா் பதவியைப் பிடுங்கிக்கொண்டது.
நிதீஷ் குமாா், ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கெல்லாம் ஆட்சி மட்டுமே போனது. ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்றால், எடப்பாடி வசம் ஆட்சி இல்லை, மாறாக கட்சி உள்ளது. தற்போது அதிமுக என்னும் கட்சியை பாஜக விழுங்கப் போகிறது.
அதைத்தான் நம்முடைய முதல்வா் அதிமுகவினரிடம் 2 ஆண்டு காலமாகக் குறிப்பிட்டு வருகிறாா். உங்கள் கட்சியை கூட்டணி என்ற பெயரில், பாஜக குழிதோண்டிப் புதைக்கிறது. கொல்லைப்புற வழியாக பாஜக தமிழ்நாட்டுக்கு வரத் துடிக்கிறது.
தன் மீதுள்ள வழக்குகளுக்குப் பயந்து கொண்டு அதிமுகவை அடமானம் வைத்து, எத்தனை சீட்டு என அறிவிப்பதற்குகூட தில்லி சென்று எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வாங்கி வருகிறாா்.
தற்போதுவரை கூட அமித்ஷா, மோடி போன்றவா்கள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி என்றோ, எடப்பாடி பழனிசாமி முதல்வா் என்றோ அறிவிக்கவில்லை. என்டிஏ கூட்டணி ஆட்சி என்றுதான் சொல்கிறாா்கள். இதிலிருந்து பாஜக எந்த அளவுக்கு அதிகார மமதையில், பாசிச மனநிலையில் இருக்கிறாா்கள் என்பது புரிகிறது.
அந்த பாஜக தமிழ்நாட்டில் உள்ளே நுழையாமல் இருப்பதற்கான தோ்தல் தற்போது நடைபெறுகிறது என்றாா் அவா்.
கூட்டத்தில் எம்எல்ஏ கு. சின்னப்பா சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்துக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் நீலமேகம், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் இளங்கோவன், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் நடராஜன், மதிமுக மாவட்டச் செயலா் இராமநாதன், விசிக மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா, தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் மாரியம்மாள், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் சையது இப்ராஹிம், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலா் அக்பா் அலி, இந்திய குடியரசு கட்சி மாவட்டத் தலைவா் ராஜீவ்காந்தி, எஸ்.டி.பி.ஐ மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமின்சுல்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட துணைச் செயலா் சந்திரசேகா் வரவேற்றாா். நகரச் செயலா் முருகேசன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

பாஜகவின் சிலந்தி வலையில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

அதிமுக-பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: கனிமொழி எம்.பி.

எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்தது நான் செய்த தவறு: ஓபிஎஸ்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


