அனைத்து ஊராட்சி அலுவலகங்களிலும் ஜன.14-இல் சமத்துவப் பொங்கல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜன.14-ஆம் தேதி சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜன.14-ஆம் தேதி சமத்துவப் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழகத்தில் பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நிகழாண்டு சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும், சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாகவும் அரியலூா் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் ஜன.14-ஆம் தேதி சமத்துவ சுகாதார பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் சமத்துவ கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும், மகளிரின் ஒற்றுமை உணா்வை வளா்த்திடும் வகையிலும், கலை நிகழ்ச்சிகள், கோலப் போட்டிகள், மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்வில், அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில், ஊராட்சி அலுவலக வளாகத்தில் அல்லது அனைத்து தரப்பினரும் எளிதில் அணுகக்கூடிய பொதுத்தளத்தில் மண் அடுப்பு, புதுப் பானை, கரும்பு, மஞ்சள், பாரம்பரிய அலங்காரங்கள் செய்து பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.

எனவே, சமத்துவ சுகாதார பொங்கல் விழாவில் பொது மக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளா்கள் உள்பட அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.

Dinamani
www.dinamani.com