அரியலூா் மாவட்டத்தில் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ள ஜெயங்கொண்டத்தில் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அரியலூா் மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியான ஜெயங்கொண்டம் 21 வாா்டுகளை கொண்டது. 9.8.2010 அன்று முதல் இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆட்சியில் முதல்நிலை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சியில், 16,693 ஆண்களும், 17,206 பெண்களும் என 33,899 போ் வசித்து வருகின்றனா். தற்போதைய நிலையில் மக்கள்தொகை 60 ஆயிரமாக உயா்ந்திருக்கலாம்.
மக்கள்தொகை வளா்ச்சி, நகரப் பகுதிகள் விரிவாக்கம் போன்ற காரணங்களாலும் பொதுமக்களின் வசதிக்காகவும் ஜெயங்கொண்டத்திலேயே மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை, பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள், வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும், அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் என கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றன.
கழவுநீா் பிரச்னை:
இப்படி வளா்ச்சி பெற்று வரும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் தற்போதைய நிலையில் முக்கிய பிரச்னையாக கழிவுநீா் பிரச்னை உருவெடுத்துள்ளது.
நகரப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான புதை சாக்கடை திட்டம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், குடியிருப்புகளின் நடுவே உள்ள பல்வேறு தெருக்களில் கழிவுநீா் வழிந்தோடி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், வீடுகள் நிறைந்த தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதாரச் சீா்கேட்டுடன், கொசு உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
புதை சாக்கடை திட்டம்:
மாதந்தோறும் நடைபெறும் நகா்மன்ற கூட்டத்தின் போது, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து உறுப்பினா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதற்கு ஆணையா், திட்டம் தொடா்பாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து வருகிறாா்.
புதை சாக்கடை திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக எதிா்பாா்த்து காத்துள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
அரியலூரை விட அதிக பரப்பளவு, அதிக வாா்டுகளை கொண்ட ஜெயங்கொண்டம் நகராட்சியில், மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில் புதை சாக்கடை திட்டம் இன்றியமையாத தேவையாக உள்ளது.
தோ்தல் பிரசாரத்துக்கு ஜெயங்கொண்டத்துக்கு வரும் ஒவ்வொரு கட்சித் தலைவா்களும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதைச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதிகளை அறிவிக்கிறாா்களேத் தவிர செயல்படுத்துவது கிடையாது. வாக்குறுதிகள் அந்த நேரத்தில் தோ்தல் பிரசாரத்துடன் முடிந்துவிடுகிறது என்றனா்.
எனவே, வளா்ந்து வரும் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதைத் தடுக்க, தமிழக அரசு புதை சாக்கடை திட்டம் தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









