
சிமெண்ட் ஆலைகள்
பிரதிப் படம்

சிமெண்ட் ஆலைகள்
பிரதிப் படம்
கனிமங்கள் நிறைந்த அரியலூர் மாவட்டத்தில் ஒரு அரசு சிமெண்ட் ஆலை, 8 தனியார் சிமெண்ட் ஆலைகள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் சிமெண்ட் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுவதால், மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கனிமங்கள் வெடிவைத்து தோண்டப்படுவதால், சுரங்கத்தைச் சுற்றியுள்ள வீடுகள் அனைத்தும் சேதமடைகின்றன. இதுமட்டுமல்லாது, வெடி சப்தத்தால் இரவுநேரங்களில் மக்கள் தூக்கம் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சிமெண்ட் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் இம்மாவட் டத்தில் பெரும்பாலான மக்கள் ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட சுவாச நோய்களால் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், சிமெண்ட் ஆலைகளில் நெகிழிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, விவசாயத்தை இழந்த இப்பகுதி மக்கள், தற்போது நெகிழிக் கழிவுகளால் ஏற்படும் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றனர். எனவே, இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளில் ஒன்றான சிமெண்ட் ஆலைகளால் ஏற்படும் சுவாசப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து ரெட்டிபாளையம், தாமரைக்குளம் பள்ளக்காவேரி பகுதி கிராம மக்கள் கூறியதாவது, சிமென்ட் ஆலை உள்ள பகுதிகளில் இரவு 9 மணிமுதல் மறுநாள் காலை 10 மணிவரை அதிக புகை வெளியேறும். இதனால் சாம்பல் புழுதி அனைத்து இடங்க ளிலும் படிந்திருக்கும் ஏரி. குளங்களில் உள்ள நீரில் கரித் துகள்கள் மிதக்கும். இரவுநேரங்களில் வெளியே போனால் தோல் வறண்டு எரிச்சல் ஏற்படும். மேலும், இந்தப் பிரச்னையால் பல பெண்களுக்கு கருச் சிதைவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
சூழலியல் செயற்பாட்டா ளர் ரமேஷ் கருப்பையா கூறியது: சிமெண்ட ஆலைகளில் உள்ள நெகிழி கழிவுகளை எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டம் மோசமான விளைவையே ஏற்படுத்தும். திருச்சி, பெரும்பலூர், கும்பகோணம் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளின் மக்காத நெகிழி குப்பைகளைப் பயன்படுத்திக் கொள்ள சிமென்ட் ஆலைகள் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் நெகிழிகளால் ஏற்படும் பிரச்னைகள் தீர்ந்தாலும், பாதிக்கப்படப்போவது அரியலூர் மாவட்ட மக்கள் தான்.
ஆலைகளில் நெகிழிகளை எரிப்பது பாதுகாப்பானதே: திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறியது நெகிழிக் கழிவுகளை சிமெண்ட் ஆலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது. சுமார் 1,500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் எரியும்போது. நெகிழித் துகள்கள் அனைத்தும் தமது மூலக்கூறு வடிவத்தை இழந்து சாம்பலாகி விடுகின்றன. இந்த சாம்பலால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது இவை சிமெண்ட்டுடன் கலந்துவிடும். ஆனால், எரிக்கும்போது வெளிப்படும் நச்சுப்புகையின் அளவைக் கண்காணிக்க வேண்டும். நிலத்தில் குவிந்து கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்குச் சரியான தீர்வு இதுதான்.
ஆனால் மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் நச்சுப் புகையை அதிக அளவில் வெளியேற்றினால் மோசமான விளைவுகளை அரியலூர் மாவட்ட மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...