கூடுதல் கட்டணம் வசூலித்தும் வசதிகளற்ற திரையரங்குகள்

     திருச்சி, ஏப். 15: அரசு நிர்ணயித்ததைவிடக் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் சில, திரைப்படக் காட்சியின் போது குளிர்சாதனக் கருவியை இயக்குவதில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் அதிகமாகவே
Updated on
2 min read



 

 

 திருச்சி, ஏப். 15: அரசு நிர்ணயித்ததைவிடக் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் சில, திரைப்படக் காட்சியின் போது குளிர்சாதனக் கருவியை இயக்குவதில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

 திருச்சி மாநகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இயங்கி வந்தன.

 திரையரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட திருட்டு விசிடி மூலம் எளிதாக ரூ. 20 விலையில் படம் பார்க்கும் வசதி, தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் புதிய திரைப்படங்கள் போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன.

 திருச்சி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 5 முதல் 8 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும், திருட்டு விசிடி மூலமாக டிவியில் படம் பார்த்தாலும், திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பதில் உள்ள திருப்தியே தனிதான் என்று கருதி, தற்போது திரையரங்குக்கு குறிப்பிட்ட அளவில் பொதுமக்கள் படம் பார்க்க வருகின்றனர்.

 இதிலும், சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை நாள்களிலும், மக்கள் ரசனைக்கு ஏற்றவாறும், நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்கள் திரையிடப்பட்டால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

 ஆனால், திரையரங்குகளில் படம் பார்க்க வருபவர்களுக்கு திரையரங்க நிர்வாகம், உரிய வசதிகளைச் செய்து தருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

 பண்டிகை தினங்களில் வழக்கத்தைவிடச் சற்று கூடுதலாகத் தொகை வசூலித்துக் கொள்ளலாம் என்று அரசு சலுகை கொடுத்ததாலோ என்னவோ, தற்போது திரையரங்குகளில் ரூ. 50-க்கும் குறைவாகக் கட்டணம் இல்லை.

 இதிலும், சில திரையரங்குகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 80, 100, 150 என்ற நிலையில்தான் உள்ளது. இவ்வளவு கட்டணத்தை வசூலிக்கும் திரையரங்குகள், திரைப்படம் ஓடும்போது அரங்கில் குளிர்சாதனக் கருவியை முழுமையாக இயக்குவதில்லை.

 கடந்த சில நாள்களுக்கு முன்பு, மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள திரையரங்குக்கு படம் பார்க்க வந்த தம்பதியினர், படம் முடிந்து வாகன நிறுத்துமிடத்தில் உள்ள தங்களது வண்டியை எடுக்கச் சென்ற போது, திரையரங்க ஊழியரிடம் வாக்குவாதம் செய்துவிட்டுச் சென்றனர்.

 இதுகுறித்து அந்த தம்பதியினர் மேலும் கூறியது:

 ரூ. 80 கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், திரையரங்கில் குளிர்சாதனக் கருவியை முழுமையாக இயக்குவதில்லை. பெயருக்குத்தான் இயக்குகிறார்கள். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிற நிலையில், திரையரங்குக்குப் படம் பார்க்க வந்தால் இங்கு அதைவிட மோசமாக இருக்கிறது. நிம்மதியாகப் படம் பார்க்க முடியவில்லை. வியர்த்துக் கொட்டுகிறது' என்று புலம்பினர்.

 திருச்சியில் உள்ள சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும்தான் குளிர்சாதனக் கருவி முழுமையாக இயக்கப்படுகிறது; அதுவும் படத்தைப் பொருத்தது.

 இதுவே இப்படி என்றால், இன்னும் சில திரையரங்குகளில் மின் விசிறியைக்கூட முழுமையாக இயக்குவதில்லை. திரையரங்கில் 10 மின் விசிறிகள் இருந்தால் 5 அல்லது 6 மட்டும் இயக்கப்படுகிறது.

 திரையரங்குகளில் இருக்கைகளும் சுத்தம் செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட சில திரையரங்குக்கு படம் பார்க்கச் சென்றால் இருக்கைகளில் அமரவே அச்சப்படும் நிலைதான் உள்ளது. சுத்தம் செய்வது கிடையாது, கிழிந்த இருக்கைகள், உடைந்த கைப்பிடிகள் மாற்றப்படுவது கிடையாது.

 இதுமட்டுமல்லாமல், திரையரங்கில் குடிப்பதற்காக வைக்கப்படும் தண்ணீர்கூட சுத்தமாக இருப்பதில்லை. மேலும், திரையரங்குகளில் உள்ள கழிப்பிடங்களில் தண்ணீரும் வருவதில்லை. சுத்தமும் செய்யப்படுவதில்லை. இப்படி எல்லா குறைகளுடனும்தான் இயங்கி வருகின்றன திருச்சியிலுள்ள திரையரங்குகள்.

 இதுபோல, நாம் கொடுக்கும் கட்டணத்தையும்கூட குறிப்பிடுவதில்லை. நாள், காட்சி விவரங்களும் இருப்பதில்லை. சில திரையரங்குகளில் முன்பதிவு கூப்பன், பழைய டிக்கெட்டுகள், ரசிகர் மன்ற கூப்பன், வணிக வரித் துறையின் முத்திரை இல்லாத டிக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.

 சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள கோட்டாட்சியர் ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றவர் என்றபோதும், இதுவரை எத்தனை ஆய்வுகள் நடைபெற்றுள்ளன? எத்தனை திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று எதுவும் தெரியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com