
பாலப் பணிக்காக மயான மேடை இடிப்பு:6 ஆண்டுகளாக திறந்தவெளியில் சடலங்களை எரிக்கும் கிராம மக்கள்
வாங்கல் - மோகனூர் பாலப்பணிக்காக மயான மேடை இடித்து அகற்றப்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக சடலத்தை திறந்தவெளியில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எரித்து வருகின்றனர்.
வாங்கல் - மோகனூர் பாலப்பணிக்காக மயான மேடை இடித்து அகற்றப்பட்டதால் கடந்த ஆறு ஆண்டுகளாக சடலத்தை திறந்தவெளியில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கலில் காவிரிக்கரையோரம் இறந்தவர்களை எரிக்க மயான மேடை மற்றும் புதைக்கும் இடுகாடு என நான்கு ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இந்த மயான மேடை மற்றும் இடுகாட்டை வாங்கல், பழையூர், கே.வேலாயுதம்பாளையம், ஆத்தூர், சுப்ரமணியபுரம், கோட்டமேடு, வாங்கல் அக்ரஹாரம், ஈவேரா தெரு, வள்ளுவர் தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியையும், நாமக்கல் மாவட்டம் மோகனூரையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப்பாலம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது வாங்கலில் இருந்து பாலத்தை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் போது மயான மேடையும் அகற்றப்பட்டது. மேலும் நான்கு ஏக்கராக இருந்த இடுகாடு 2 ஏக்கராக சுருங்கியது. மேலும் அகற்றப்பட்ட மயான மேடைக்குப் பதிலாக புதிய மயான மேடையும் கட்டித்தரப்படவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியின் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து வாங்கலைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பாலப்பணிக்காக சாலை, இடுகாட்டின் மையப்பகுதி வழியாக அமைக்கப்பட்டதால் ஈமச்சடங்கு செய்வதற்கான இடம் மட்டுமே உள்ளது. சடலத்தை எரிக்க மேடை இல்லாததால் திறந்தவெளியில்தான் சடலத்தை எரித்து வருகிறோம். மழைக்காலங்களில் சடலத்தை எரிக்க முடியாமல் அவதியுற்று வருகிறோம். மேலும் மயானத்துக்கு செல்ல சாலை வசதியும் இல்லை. எரிக்கும் இடத்தில் இருந்து ஈமச்சடங்கு செய்யும் இடத்திற்குச் செல்ல சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதுதொடர்பாக ஊர் மக்கள் சார்பில் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விரைவில் இந்த பிரச்னைக்கு அரசு தீர்வு தீர்வு காண வேண்டும். இல்லையேல் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




