தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர வேண்டும்
By DIN | Published On : 05th February 2019 04:04 AM | Last Updated : 05th February 2019 04:04 AM | அ+அ அ- |

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் உணரவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
30 ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை திங்கள்கிழமை தொடக்கி வைத்து, மேலும் அவர் பேசியது:
விபத்தில்லா பயணம், சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பிப்.4 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை இந்த வார விழா கரூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
திங்கள்கிழமை தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிப். 6- ஆம் தேதி அன்று சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து கல்லூரி மாணவர்களிடையே விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 7-ஆம்தேதி வாகனங்களில் ஒளிரும் பிரதிபலிப்பான் பட்டைகள் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளன.
பிப்.8 ஆம் தேதி 4 மற்றும் 6 வழிச்சாலைகளில் எதிர்திசையில் விதிகளை மீறி செல்வதால் ஏற்படும் தீமை, போக்குவரத்தின்போது சிக்னலில் காட்டப்படும்
விளக்குகளின் விளக்கங்களும், அவசரஊர்தி செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
9-ஆம்தேதி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களுக்கு தகுதிச்சான்றுகள் வழங்குதல், மாசில்லா பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும்,10-ஆம்தேதி நிறைவுவிழாவும் நடைபெறவுள்ளது.
தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது விபத்தின்போது அதிக பாதிப்பில்லாமல் உயிரை காத்திட உதவும். இதை எப்போதும் பயணத்தின் போது கடைபிடிப்பது பாதுகாப்பான ஒன்றாகும். தலைக்கவசம் உயிர் கவசம் என்ற வாசகத்தை வாகன ஓட்டிகள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி பேருந்தை ஆட்சியர் திறந்துவைத்து பார்வையிட்டார்.
காவல் துறையினர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள், ஊர்க்காவல் படை, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 400-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து வாகங்களை ஓட்டினர்.
நிகழ்வில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துகழக பொதுமேலாளர் ராஜ்மோகன், காவல் துணை கண்காணிப்பாளர் ம.கும்மராஜா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்த், தனசேகரன், ரவிசந்திரன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.