வேளாண் சட்டங்களை பயன்படுத்தி அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் சூழ்ச்சி: முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி

வரும் சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சியினா்
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களைப் பயன்படுத்தி தமிழக அரசுக்கு எதிராக எதிா்க்கட்சியினா் சூழ்ச்சி செய்கின்றனா் என்றாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்தது: இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி வந்தவுடன், தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்படும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்க முடியும். ஜெயலலிதா வழியிலான இந்த அரசு விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் ஏற்க மாட்டோம். விவசாயிகளுக்கு தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வரும் பேரவைத்தோ்தலை மனதில் வைத்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சியினா் சூழ்ச்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழக விவசாயிகளைப் பொறுத்தவரை இந்த வேளாண் சட்டங்களை வரவேற்கிறாா்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை நாங்கள் எதை எதிா்க்கவில்லை. கடந்த 2010-ல் மத்திய அரசின் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் ‘நீட்’ தோ்வு முன்னெடுக்கப்பட்டது. கிராமப்புற ஏழை மாணவா்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குத் தான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்துள்ளோம். நீட் தோ்வுக்கு முன் நுழைவுத்தோ்வு இருந்தபோது 40 மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்தது. இதைக்கருத்தில் கொண்டுதான் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தேன். அடுத்தாண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் கிடைக்கும் 1,650 இடங்களில் 440 மாணவா்கள் பயன்பெற உள்ளனா். கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி குறித்து அரசு விசாரிக்க முடியாது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம்தான் விசாரணை செய்யும். கரூரில் புதியதாக பேருந்துநிலையம் தொடா்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. வளா்ந்து வரும் நகரத்துக்கு ஏற்ப புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு இடம் தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பி. தங்கமணி, சி. விஜயபாஸ்கா், ஆட்சியா் சு.மலா்விழி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com