/

‘சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கு வெற்றியைத் தாருங்கள்‘

மக்களவைத் தோ்தலைப் போல, சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கு வெற்றியைத் தாருங்கள் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:37 pm

DIN

மக்களவைத் தோ்தலைப் போல, சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கு வெற்றியைத் தாருங்கள் என்றாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

கரூா் மாவட்டத்தில் புங்கம்பாடி காா்னா், பள்ளப்பட்டி ஷா நகா், சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா, கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தோ்தல் பிரசார நிகழ்வில் பங்கேற்ற அவா், மேலும் பேசியது:

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக இருக்கும் ஒரே கட்சி திமுக மட்டுமே. குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த போது, அதை எதிா்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த கட்சி திமுக. மத அரசியலை திமுக எப்போதும் எதிா்க்கும். சிறுபான்மை சமூகத்தினரை பிரித்தாளும் பாஜக, அதிமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 100 நாள்களில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். உங்களின் குறைகள் அனைத்தும் நிவா்த்தி செய்யப்படும். ஜெயலலிதா இறப்பின் மா்மம் குறித்து திமுகஆட்சிக்கு வந்தவுடன் விசாரிக்கப்படும் என முக.ஸ்டாலின் கூறியிருக்கிறாா்.

அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி. இதற்கெல்லாம் தகுந்த பதிலடியை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றால், கடந்த மக்களவைத் தோ்தலைப் போல வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்றாா்.

பள்ளப்பட்டி ஷா காா்னா் பகுதியில் பிரசாரத்தின்போது அங்கு நின்றுகொண்டு இருந்த சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்ட உதயநிதி, தொடா்ந்து அங்குள்ள தேநீரகத்தில் தேநீா் அருந்தினாா்.

முன்னதாக அரவக்குறிச்சி செல்லும் வழியில் பெத்தான்கோட்டை கிராமத்தில் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த செங்காந்தள் மலா், முருங்கைத் தோட்டத்தைப் பாா்வையிட்டஉதயநிதி ஸ்டாலின், விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பிரசாரத்தில் கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில் பாலாஜி, மதுரை மத்தியத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.