கரூர் அருகே கல்குவாரியில் 300 அடி ஆழத்திற்குள் இருந்து கற்களை ஏற்றி மேல்நோக்கி வந்துகொண்டிருந்த லாரி மீது ராட்சத பாறை சரிந்துவிழுந்ததில் ஓட்டுநர் உடல்நசுங்கி இறந்தார்.
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தை அடுத்த காங்கேயம்பாளையம் தனியார் கல்குவாரியை நாமக்கல்லைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். சுமார் 300 அடி ஆழம் கொண்ட அந்த கல் குவாரியில் வெட்டப்படும் பாறைக்கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி கற்கள் உடைக்கும் பகுதியான கிரசருக்கு கொண்டுவருவது வழக்கம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாறைக்குழிக்குள் வெட்டப்பட்டிருந்த கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி மேலே கொண்டு வரும்பணியில் கரூர் சேங்கலை அடுத்த பாப்பையம்பட்டியைச் சேர்ந்த சுப்பையா (40) என்பவர் ஈடுபட்டிருந்தார். இரவு 11 மணியளவில் கற்களை ஆழமான பகுதியில் இருந்து ஏற்றிக்கொண்டு மேல்நோக்கி சுமார் 150 அடி ஆழ பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பக்கவாட்டில் இருந்த சுமார் 3,000 டன் எடைகொண்ட ராட்சத பாறை திடீரென சரிந்து லாரி மீது விழுந்தது. இதனால் சுப்பையா லாரியின் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டார்.