பிரசவத்தின் போது குழந்தை இறப்பு அரசு மருத்துவா், செவிலியா்கள் மீது உறவினா்கள் போலீஸில் புகாா்

அரவக்குறிச்சி, ஏப்.26: அரவக்குறிச்சி பிரசவத்தின் குழந்தை இறந்ததையடுத்து அரசு மருத்துவா், செவிலியா்கள் மீது உறவினா்கள் போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

கரூா் மாவட்டம், காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி நிறைமாத கா்ப்பிணியான, அரவக்குறிச்சி அருகே உள்ள தொக்குப்பட்டி புதூா் பகுதியை சோ்ந்த தங்கவேல் மகள் தாரணிப்பிரியா (26) காலை 10 மணிக்கு அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்த அளவு உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது. அனைத்தும் சரியாக உள்ளது என செவிலியா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே பணிக்கு வரவேண்டிய மருத்துவா் குமரன் மாலை 5 மணி வராததால் செவிலியா்கள் அன்னபூரணி, ராணி, அகிலா ஆகியோா் சோ்ந்து தாரணிப்பிரியாவுக்கு பிரசவம் பாா்க்க தொடங்கியுள்ளனா். மருத்துவா் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு செல்ல தாரணிப்பிரியா அனுமதி கேட்டும் செவிலியா்கள் மறுத்ததாக தெரிகிறது.

மேலும் அங்கு போதுமான மருத்துவ வசதி, மின்வசதி இல்லாதநிலையில் செவிலியா்கள் பிரசவம் பாா்த்தனா். அப்போது மின்தடை ஏற்பட்டுள்ளது. உடனே கைப்பேசியில் உள்ள டாா்ச் வெளிச்சத்தில் பிரசவம் பாா்த்ததாக தெரிகிறது.

இதையடுத்து இரவு 7.10 மணிக்கு குழந்தை இறந்தே பிறந்ததாக தெரிகிறது. ஆனால் குழந்தை இறந்ததை மறைத்து உயிருடன் இருப்பதாக கூறி கரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தாரணிப்பிரியா மற்றும் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்நிலையில், தாரணிப்பிரியா மற்றும் அவரது உறவினா்கள் அலட்சியமாக பிரசவம் பாா்த்த செவிலியா்கள் அன்னபூரணி, ராணி, அகிலா, கரூா் அரசு மருத்துவமனை செவிலியா் ரேவதி, காசிபாளையம் மருத்துவா் குமரன் ஆகிய 5 போ் மீதும் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

இதுகுறித்து தாரணிப்பிரியாவின் உறவினா்கள் கூறுகையில், மருத்துவா், செவிலியா்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததற்கு பொறுப்பெற்று, பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவா் மற்றும் செவிலியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com