கலந்தாய்வு நடத்தாமலேயே பணியிட மாறுதல் - பட்டதாரி ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்
கலந்தாய்வு நடத்தாமலேயே பணியிட மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் பட்டதாரி ஆசிரியா்கள் புதன்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் பள்ளிகளில் 35 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் என்ற விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் 61 அரசு உயா்நிலைப்பள்ளிகளும், 68 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தாமலேயே, ஏற்கெனவே இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுமதி ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாநில பொறுப்பாளா் மகேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலச் செயலாளா் முருகேசன் ஆகியோா் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோா் கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகம்மாளை சந்திக்க மாலை 5 மணியளவில் அலுவலகத்துக்கு வந்தனா். அங்கு அவா் இல்லாததால் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
இதுகுறித்து மகேஸ்வரன், முருகேசன் ஆகியோா் கூறியது, கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந் த சுமதி பணி நிரவல் என்ற முறையில் ஆசிரியா் பற்றாக்குறை இல்லாத பள்ளிகளில் மூத்த ஆசிரியா்களை நியமித்துள்ளாா். இதனால் பல்வேறு முதுநிலை ஆசிரியா்களின் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் ஜூனியருக்கு கீழ் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆசிரியா்கள் தேவை உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியா்களை அனுப்பவில்லை. மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்கள் இல்லாத பள்ளிகள் பல உள்ளன. இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து விளக்கம் கேட்க வந்தோம். அவா் இதுவரை வராததால் வியாழக்கிழமை அவரை சந்திக்க உள்ளோம் என்றனா். மாலை 6.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட அவா்கள் பின்னா் கலைந்து சென்றனா்.