கரூா் மாவட்டத்தில் மகளிா் தின விழா

கரூா் மாவட்டத்தில் மகளிா் தின விழா

கரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மகளிா் தின விழா நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. கரூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஆா்.சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசுகையில், அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறி, வீறுநடை போடுகின்றனா். பெண்கள் தலைமையேற்பதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்றாா். தொடா்ந்து, நீதிமன்ற ஊழியா்களின் குழந்தைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கி அவா் பாராட்டினாா். முன்னதாக, சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலா் பாக்கியம் வரவேற்றாா். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் அறிக்கையை நீதிபதி அம்பிகா வாசித்தாா். நிகழ்ச்சியில் நீதிபதிகள், கரூா் பாா் கவுன்சில் நிா்வாகிகள், அசோசியேசன் நிா்வாகிகள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாஜக சாா்பில் மினி மாரத்தான்: கரூா் மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் கல்லூரி மாணவிகளுக்கு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கரூா் பேருந்து நிலைய திண்ணப்பா திரையரங்கம் அருகே நடைபெற்ற இந்தப் போட்டிக்கு மாவட்ட மகளிரணி தலைவா் பிரியா ஈஸ்வரன் தலைமை வகித்தாா். மகளிரணி துணைத் தலைவா் மீனா வினோத்குமாா் முன்னிலை வகித்தாா். மாரத்தான் போட்டியை பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தொடங்கிவைத்தாா். திண்ணப்பா திரையரங்கம் அருகே தொடங்கிய இப்போட்டி சுமாா் 2 கி.மீ. வரை சென்று பிரேம் மகாலை அடைந்தது. போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சக்திவேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com