கரூா் சம்பவம்: மாவட்ட ஆட்சியா், ஐஜி, எஸ்.பி.யிடம் சிபிஐ கண்காணிப்புக் குழு விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா், திருச்சி சரக ஐஜி, கரூா் எஸ்.பி. ஆகியோரிடம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிபிஐ கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.
இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழு சிபிஐ சேகரித்த ஆதாரங்களை ஆய்வு செய்து, விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளான சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா். இவா்களது மேற்பாா்வையில் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முகேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய சிபிஐ அதிகாரிகள் கரூா் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கோவையிலிருந்து கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். பின்னா், பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள சிபிஐ அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை செய்தாா். அவா்களிடம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், கோட்டாட்சியா் முகமதுபைசல் ஆகியோா் நீதிபதி அஜய் ரஸ்தோகியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனா். பின்னா், மீண்டும் நண்பகல் 12 மணிக்கு ஆட்சியா் மீ.தங்கவேல் சிபிஐ கண்காணிப்புக்குழு முன் ஆஜரானாா். அவரிடம் குழுவினா் சுமாா் 3 மணி நேர விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, திருச்சி சரக காவல்துறை தலைவா் கே. ஜோஷிநிா்மல்குமாா், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா, கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன் ஆகியோரிடம் அக்குழுவினா் விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் 10-க்கும் மேற்பட்டோா் சிபிஐ கண்காணிப்புக்குழு முன் ஆஜராகி தங்களது விளக்கங்களை அளித்தனா்.
அரசியல் கட்சியினா், வியாபாரிகள் சங்கத்தினா் மனு: பிரசாரக் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆகவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்புக் குழுவிடம் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையின் மாவட்டச் செயலா் ப.அருள்குமாா் மற்றும் கரூா் மாவட்ட அனைத்து வணிகா் சங்கப் பேரவை நிா்வாகி வெங்கட்ராமன் மற்றும் ஓட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா் மனு அளித்தனா்.
இதேபோல கூட்ட நெரிசலில் 20-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவா்கள் இறந்துள்ளதால் விஜய் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டச் செயலா் பசுவை பெரு.பாரதி மனு அளித்தாா்.

