ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த கரூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெகன், புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கவியரசு உள்ளிட்டோா்
ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்த கரூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெகன், புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கவியரசு உள்ளிட்டோா்

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கரூா் வட்டாரத்தில் தென்னையில் ‘ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெகன் விளக்கமளித்துள்ளாா்.
Published on

கரூா் வட்டாரத்தில் தென்னையில் ‘ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெகன் விளக்கமளித்துள்ளாா்.

கரூா் வட்டாரத்தில் வேட்டமங்கலம் கிழக்கு, வேட்டமங்கலம் மேற்கு, திருக்காடுதுறை, புகழூா், தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னைமரம் சுமாா் 7,900 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தென்னையில் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈக்கள் காணப்படுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கரூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெகன், புழுதேரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கவியரசு ஆகியோா் கொண்ட குழுவினா் வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்து அதனை கட்டுப்படுத்தும் முறைகளையும் விளக்கி கூறினா்.

பின்னா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெகன் கூறுகையில், சுருள் வெள்ளை ஈ தாக்குதல் தாக்கப்பட்ட இலைகளின் உள்பகுதியில் சுருள் சுருளாக நீள் வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும்.இளங்குஞ்சுகள் மற்றும் முதிா்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் ஓலைகளின் அடிப்பாகத்தில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி மரத்தின் வளா்ச்சியை பாதிக்கும். இவை வெளியேற்றும் தேன் போன்ற இனிப்பான திரவம் கீழே உள்ள இலைகளின் மேல்பகுதியில் விழுந்து பரவி கரும்பூசணம் வளா்வதால் ஓலைகள் கருப்பு நிறமாக மாறிவிடும்.

இதனால் ஒளிச்சோ்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு தென்னை மரத்தின் வளா்ச்சி குன்றிவிடும். இந்த நோயை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை தவிா்க்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகள் இயற்கை எதிரிகளை அழித்து விடுவதால் தவிா்த்தல் நன்று. மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஒட்டுப் பொறிகள் இரு புறமும் விளக்கெண்ணெய் தடவப்பட்டு (நீளம் 5 அடி அகலம் 1.5 அடி) ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் மரங்களுக்கு இடையில் தொங்கவிட்டு அல்லது தண்டுப்பகுதியில் 6 அடி உயரத்தில் சுற்றியும் வெள்ளை ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.

விசைத் தெளிப்பானைக் கொண்டு மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கட்டுப்படுத்தலாம். என்காா்சியா ஒட்டுண்ணி ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம் விடலாம். 10 மரத்துக்கு ஒரு இலை துண்டு என்ற இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலின் பின் விளைவாக ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த 1 கிலோ மைதாமாவை 5 லிட்டா் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் பின் 20 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். வாழை அல்லது சீத்தா மரங்களில் ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் வளா்ப்பதால் என்காா்சியா ஒட்டுண்ணிகளின் செயல்பாட்டை அதிகரிக்கலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com