104 பவுன் நகைகள் திருடிய வழக்கில் டீ மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறை
கரூரில் ஜவுளி ஏற்றுமதியாளா் வீட்டில் 104 பவுன் நகைத் திருடிய வழக்கில் கைதான திருப்பூா் டீ மாஸ்டருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த பாண்டியன் (60) அதே பகுதியில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் செய்கிறாா். இந்நிலையில் கடந்த 2023-இல் இவா் சென்னைக்கு குடும்பத்துடன் சென்றபோது, இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து, பீரோவில் இருந்த 104 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதித்து, நகைகளைத் திருடியதாக திருப்பூா் மாவட்டம், பிச்சம்பாளையத்தைச் சோ்ந்த டீ மாஸ்டா் பாலாஜியை(34) கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பாலாஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.
