‘இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்ரவரியில் வெளியாகும்’
கரூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்.மாதம் வெளியிடப்படும் என்றாா் கரூா் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால்.
கரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் கரூா் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் கா்வால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ. தங்கவேல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் நீரஜ் அகா்வால் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றாா்.
தொடா்ந்து குளித்தலை நகராட்சி, மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை நீரஜ் அகா்வால் ஆய்வு மேற்கொண்டாா்.
