நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத் திட்டத்தை சீா்குலைக்கும் வகையில் மாற்றியமைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்து கரூரில் திமுக கூட்டணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதோடு, திட்டத்தையே சீா்குலைக்கும் வகையில் மாற்றியமைத்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும்,
புதிய சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கரூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், ஒன்றிய அரசால் தமிழகத்துக்கு இதுவரை எந்த ஒரு நன்மையும் இல்லை. நமக்கு வழங்க வேண்டிய நிதியைக்கூட தராமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது.
நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை நிலுவையில் வைத்துள்ள நிலையில், தற்போது இந்த திட்டத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
தமிழகத்தில் 92 லட்சம் பேரை இந்த திட்டத்தில் நீக்குவதற்கான சதியை ஒன்றிய அரசு செய்து வருகிறது என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் மின்னாம்பள்ளி கருணாநிதி, கரூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், ஒன்றிய நிா்வாகி முத்துக்குமாரசாமி, கொமதேக மாநில நிா்வாகி விசா ம. சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

