கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தேவை: திண்டுக்கல் எம்.பி.
கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்களை நீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற்றும் நடவடிக்கையில் வருவாய்த்துறையினா் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைக் கண்டித்து கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ஆா்.சச்சிதானந்தம் பங்கேற்று பேசியது: கரூா் மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட காதப்பாறை, வெண்ணைமலை பகுதியில் இனாம்நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டு, அ பதிவேடும் வெளியிடப்பட்டு, அந்த நிலங்களுக்கு பட்டாவும் பெற்று சுமாா் 1200 குடும்பத்தினா் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனா்.
இப்போது இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு வழக்குகளின் வழிகாட்டுதல்களை தவறாக புரிந்துகொண்டு குடியிருப்பவா்களை காலி செய்யும் நோக்கில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனா்.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, கோயில் நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு இனாம் ஒழிப்பு சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவா் கே.கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

