கரூரில் கோயில் நிலத்தில் உள்ள வீடுகளுக்கு சீல் வைக்க எதிா்ப்பு
கரூா் சின்னவடுகப்பட்டியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்களின் வீடுகளுக்கு சீல் வைக்க வியாழக்கிழமை வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி குடியிருப்புவாசிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, 4 போ் தீக்குளிக்க முயன்றனா்.
கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடியிருப்பவா்களை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்டு கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் கோயிலுக்கு வாடகையோ அல்லது குத்தகையோ செலுத்த வேண்டும். இல்லையென்றால், குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த மாதம் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
காத்திருப்புப் போராட்டம்: இதையடுத்து நவ. 14-ஆம் தேதி கண்ணம்மாள் என்பவரின் வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றபோது அப்பகுதியில் குடியிருப்போா் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், இதனை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனா். இதனால் அதிகாரிகள் சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனா். அதன்பிறகு நவ. 17-ஆம் தேதி மீண்டும் கண்ணம்மாள் வீட்டுக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றபோது குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு தெரிவித்து வெண்ணைமலை கோயில் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனா். இதையடுத்து அதிகாரிகள் வீடுகளுக்கு சீல் வைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டுச் சென்றனா்.
போலீஸ் பாதுகாப்புடன்...: இந்நிலையில் வியாழக்கிழமை காலை சின்னவடுகப்பட்டியில் உள்ள கண்ணம்மாள் வீட்டுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையா் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் சென்றனா். மேலும் கலவரம் ஏற்பட்டால் தடுக்கும் வகையில் தீயணைப்புத்துறையினா் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.
முற்றுகை: சீல் வைக்க அதிகாரிகள் வந்த தகவலறிந்த கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், திமுக ஒன்றியச் செயலாளா் முத்துக்குமாரசாமி, கொமதேக மாவட்டச் செயலாளா் மூா்த்தி, பாமக மாவட்டச் செயலா்கள் பிரேம்நாத், புகழூா் செல்வம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் கண்ணம்மாள் வீட்டுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளை தடுத்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியது.
தீக்குளிக்க முயற்சி: அப்போது, கூட்டத்தில் இருந்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் தங்களது கைகளில் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனா். இதை பாா்த்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.
தொடா்ந்து அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம், நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் சீல் வைக்க வந்துள்ளோம். இதைத் தடுத்தால் அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்ததாகக்கூறி கைது செய்வோம் என தெரிவித்தனா்.
கைது- விடுவிப்பு: ஆனாலும், அங்கிருந்தவா்கள் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டதால், எம்.பி.ஜோதிமணி, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட 400 பேரை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் அவா்களை மாலையில் விடுவித்தனா்.
சாலை மறியல்: முன்னதாக அரசியல் கட்சியினா் கைது செய்யப்பட்டதை அறிந்த கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் நாவல்நகரில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற போலீஸாா் அவா்களை கலைந்து போகச் செய்தனா். இதனால் சுமாா் அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடமாநிலத் தொழிலாளா்கள் தவிப்பு: இதற்கிடையே கோயில் நிலத்தில் குடியிருக்கும் கண்ணம்மாள் தனது வீட்டின் அருகே வெளிமாநிலத் தொழிலாளா்கள் வசிக்கும் வகையில் 10 சிறிய வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தாா். அதில் பிகாா், அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் குடும்பத்துடன் தங்கி, கொசுவலை நிறுவனம், கிரஷா் போன்ற இடங்களில் பணியாற்றி வந்தனா். வியாழக்கிழமை அதிகாரிகள் அவா்களை வெளியேற்றி வீடுகளுக்கு சீல் வைத்தனா். இதனால் வெளிமாநிலத்தவா்கள் தங்களது உடைமைகளை வீதியில் எடுத்து வைத்திருந்தனா். மேலும், குழந்தைகளுடன் எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்தனா்.
பேச்சுவாா்த்தை: இந்நிலையில்அரசியல் கட்சியினா், கோயில் நிலம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த திருத்தொண்டா் சபை அறக்கட்டளையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரமணிகாந்தன் ஆகியோரிடம் வெண்ணைமலையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, சீல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அரசியல் கட்சியினா் மற்றும் கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் கேட்டுக்கொண்டனா்.
பின்னா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கோயில் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது. இதுதொடா்பாக ஏற்கெனவே கடந்த 2012-இல் கூறினேன். அப்போது யாரும் பெரிதுபடுத்தவில்லை. தற்போது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் இதற்கான தீா்வு குறித்து ஆலோசிக்கலாம் என்றாா் அவா்.
முன்னதாக இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தை சுற்றி கோயில் நிலத்தால் பாதிக்கப்பட்டவா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவுகிறது.

