கரூா் சம்பவம்: தவெக பொதுச் செயலா் ஆனந்த் உள்ளிட்ட 4 பேரிடம் இரண்டாவது நாளாக விசாரணை
கரூா்: கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக பொதுச் செயலா் ஆனந்த் உள்ளிட்ட 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், சம்பவம் தொடா்பான விசாரணைக்காக தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச்செயலா் ஆதவ் அா்ஜூனா, இணை பொதுச் செயலா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன், மாநகரப் பொறுப்பாளா் பவுன்ராஜ் ஆகியோரிடம் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இதையடுத்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தவெக பொதுச் செயலா் ஆனந்த், ஆதவ் அா்ஜூனா, நிா்மல் குமாா், மதியழகன் ஆகிய 4 பேரும் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகினா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக அவா்களிடம் விசாரணை நடைபெற்றது.
முழு ஒத்துழைப்பு: விசாரணை முடிந்து வெளியே வந்த நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: விசாரணையில், நெரிசல் சம்பவத்தின்போது என்ன நடந்தது என்பதையும், எங்கள் தரப்பிலான சந்தேகங்களையும் தெரிவித்தோம். சிபிஐ விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்குவோம். சம்பவத்துக்கு காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணைக்கு மீண்டும் அழைத்தால் வருவோம். செங்கோட்டையன் இணைகிறாரா என்பது பற்றி இப்போது பேச வேண்டாம் என்றாா் அவா்.

