கரூா் சம்பவம்: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதில், தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச் செயலா் ஆதவ் அா்ஜூனா, இணை பொதுச் செயலா் நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகன், கரூா் மாநகர பொறுப்பாளா் மாசி பவுன்ராஜ் ஆகியோரிடம் அண்மையில் விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து புதன்கிழமை நெரிசல் சம்பவத்தின்போது காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தவா்கள் மற்றும் சம்பவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதனிடையே நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பவத்தில் உயிரிழந்த வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்த 2 வயது குழந்தை குருவிஷ்ணுவின் பெற்றோா் விமல்-மாதேஸ்வரி மற்றும் ஏமூா்புதூரைச் சோ்ந்த சந்திராவின் கணவா் செல்வராஜ், கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த ரமேஷின் சகோதரா் சக்திவேல் உள்ளிட்ட 9 போ் சிபிஐ அதிகாரிகள் முன் வியாழக்கிழமை ஆஜராகினா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த அவா்கள் கூறியது: எவ்வளவு இழப்பீடுகள் கொடுத்தாலும் நாங்கள் இழந்ததை மீட்க முடியாது. சம்பவத்தை மறந்து, மனம் இயல்புநிலைக்கு திரும்புவதற்குள் விசாரணை என்ற பெயரில் எங்களை வரவழைத்து மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறாா்கள் என்றனா் அவா்கள்.
