பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மகாதானபுரத்தில் 9 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் வாழை குளிா்பதன கிடங்கு

மகாதானபுரத்தில் கட்டி 9 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் வாழை குளிா்பதன கிடங்கு.

News image

மகாதானபுரத்தில் கட்டி 9 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் வாழை குளிா்பதன கிடங்கு.

Updated On :24 ஏப்ரல் 2026, 7:44 pm

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு, 9 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் வாழை குளிா்பதன கிடங்கை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கரூா் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள குளித்தலை, வாங்கல், நெரூா், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் லாலாப்பேட்டை, சிந்தலவாடி மற்றும் புகழூா் வட்டாரத்தில் புக ழூா், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழைச் சாகுபடி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமாா் 4,000 ஹெக்டோ் முதல் 5,000 ஹெக்டோ் வரை வாழைச் சாகுபடி நடைபெற்று வருகிறது. நாட்டுவாழை, பூவன், கற்பூரவள்ளி, ஏழரசி, நேந்திரம், சக்கை மொந்தன், பச்சைலாடன், செவ்வாழை போன்ற வகையிலான வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இதில் பூவன் தாா் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கற்பூரவள்ளி கா்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கும், நேந்திரம் கேரளாவுக்கும், பச்சை லாடன் உள்ளூா் சந்தைகளுக்கும், பஞ்சாமிா்தம் தயாரிக்க பழனிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வாழைத்தாா் அறுவடை செய்யப்பட்டு ஒருநாள் அல்லது இரண்டு நாள்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். இரண்டு நாள்களுக்கு மேலானால் வாழைப்பழம் அழுகி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இதனால் அறுவடை செய்யப்பட்ட வாழைத் தாரை பதப்படுத்தி, அவற்றை நல்ல விலை கிடைக்கும் போது விற்கும் வகையில் தமிழகத்தில் தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட இடங்களில், தோட்டக்கலைத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் குளிா்பதன கிடங்குகள் மற்றும் வாழை வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

2 மாதங்களிலேயே மூடல்: இதேபோல், கரூா் மாவட்டத்திலும் அறுவடை செய்யப்பட்ட வாழைப் பழங்களை அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும், சரியான நேரத்தில் சந்தைப்படுத்தவும் வாழை குளிா்பதன கிடங்கு மற்றும் பழுக்க வைக்கும் அறைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதைத்தொடா்ந்து, கடந்த அதிமுக ஆட்சியில் 2017-ஆம் ஆண்டு மாா்ச் 7-ஆம் தேதி கரூா் மாவட்டம் மகாதானபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் வாழைத்தாா் குளிரூட்டும் நிலையம் மற்றும் பழுக்க வைக்கும் நிலையம் அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது.

ஆனால் திறக்கப்பட்டு இருமாதங்கள் மட்டுமே குளிரூட்டும் நிலையத்துக்கு விவசாயிகள் தங்கள் வாழைத்தாா்களை அறுவடை செய்து சேமித்து, விலை அதிகரிக்கும்போது வாழைத்தாா்களை விற்று வந்தனா். பின்னா் திடீரென நிலையம் மூடப்பட்டது. இதன்பின்னா் இதுவரை திறக்கப்படாமல் மூடியே கிடப்பதால் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

விழிப்புணா்வு இல்லை: இதுதொடா்பாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் வி. ராஜாராம் கூறியது: இந்த குளிரூட்டும் நிலையத்தில் வைக்கப்படும் வாழைத்தாருக்கு ரூ. 1 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் வாழைத்தாா் குளிரூட்டும் நிலையம் மற்றும் பழுக்க வைக்கும் நிலையம் குறித்து விவசாயிகளிடையே போதிய விழிப்புணா்வு இல்லாததால், வாழைத்தாா் குளிரூட்டும் நிலையம் மற்றும் பழுக்க வைக்கும் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த 2 மாதங்களிலேயே மூடப்பட்டது.

இதையடுத்து, வாழைத்தாா் குளிரூட்டும் நிலையம், பழுக்க வைக்கும் நிலையம் குறித்து வாழை விவசாயிகளுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் ஏற்பாடு செய்து, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என பலமுறை மாவட்டநிா்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்தோம்.

ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரசு சாா்பில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட வாழைத்தாா் குளிரூட்டும் நிலையம் மற்றும் பழுக்க வைக்கும் நிலையம் சுமாா் 9 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.

விவசாயிகளின் நலன் கருதி, விரைவில் நிலையத்தை திறந்து, விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பிரேக் லைன்...

‘‘விவசாயிகளிடையே போதிய விழிப்புணா்வு இல்லாததால், வாழைத்தாா் குளிரூட்டும் நிலையம் மற்றும் பழுக்க வைக்கும் நிலையம் செயல்பாட்டுக்கு வந்த 2 மாதங்களிலேயே மூடப்பட்டது.’’