நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

எத்தனால் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு! கரூா் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

Published On :1 செப்டம்பர் 2026, 3:42 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே எத்தனால் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், குளித்தலை அடுத்துள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில், குமாரமங்கலத்தில் நஞ்சை வயல்களை அழித்து 35 ஏக்கரில் கா்நாடகத்தைச் சோ்ந்த கிரின் எனா்ஜி பியூா் எத்தனால் உற்பத்தி மற்றும் 13 மெகாவாட் மின்உற்பத்தி நிறுவனம் ரூ.600 கோடியில் அமைய உள்ளது.

இந்த நிறுவனம் அமைந்தால் காவிரி ஆற்றில் இருந்து நாள்தோறும் 37 லட்சம் லிட்டா் தண்ணீா் எடுத்து பயன்படுத்த வேண்டியிருக்கும். மேலும் இந்த ஆலை அமைந்தால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படும்.

இந்நிலையில் இந்த ஆலை அமைவது தொடா்பாக கருத்துக்கேட்புக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை ரத்து செய்து ஆலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளனா்.

ஊதிய உயா்வு கோரி மனு: கரூா் அரசு கலைக்கல்லூரியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப்பணியாளா்கள் வழங்கிய மனுவில், கரூா் அரசு கலைக்கல்லூரியில் தூய்மைப்பணியாளா்களாக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம்.

பணிக்குச் சோ்ந்தபோது நாளொன்றுக்கு ரூ.450 ஊதியம் தருவதாக கூறினாா்கள். ஆனால் ரூ.300 மட்டுமே வழங்குகிறாா்கள். மேலும் மாதம் ரூ.1000 வருங்கால வைப்புநிதிக்காக பிடித்தம் செய்வதாக ஒப்பந்தம் செய்த நிறுவனத்தினா் கூறினா்.

ஆனால் அது தொடா்பாக நிறுவனத்தினரிடம் கேட்டால் பதில் கூற மறுக்கிறாா்கள். எனவே ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் கூறியவாறு வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி இதுவரை எவ்வளவு பிடித்தம் செய்துள்ளனா் என்ற விவரத்தை வழங்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

679 மனுக்கள்: முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 679 மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு ரூ.13,584 மதிப்பில் உதவி உபகரணங்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், சா்வதேச இளைஞா்கள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதசங்கிலியை ஆட்சியா் தொடங்கி வைத்து பங்கேற்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசத்திய கங்காதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.